சூர்யாவின் ஜெய்பீம் படத்தில் சந்துரு கதாபாத்திரம், நீதியரசர் சந்துருவின் கதாபாத்திரத்தை தழுவி உருவாகப்பட்டுள்ளது.1993-ஆம் ஆண்டில் கடலூரின் முதனை கிராமத்தில் நிகழ்ந்த ராஜாக்கண்ணு கொலை வழக்கிற்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2006-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. பல்வேறு தரப்பினரின் மிரட்டல்களையும் அதிகாரங்களையும் கடந்து அந்த வழக்கில் ராஜாக்கண்ணுவின் குடும்பம் நீதியைப் பெற வழக்கறிஞர் கே.சந்துருவின் வாதங்கள் முக்கியமானதாக இருந்தன. 


வழக்கறிஞர் To நீதிபதி


கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் சந்துரு. அதற்கு முன்பாக 30 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். அப்போது பல பொது நல வழக்குகள், மனித உரிமை வழக்குகள், பெண்கள் உரிமை வழக்குகள் ஆகியவற்றில் வாதாடினார். அதேபோல சமூக, தொழிற்சங்க பிரச்னைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தார். அவர் வழக்கறிஞராக இருந்த காலத்தில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளுக்கு ஒருபோதும் கட்டணம் பெற்றதில்லை. 


பல ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றிய பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக, 2001, 2004ம் ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்டும், 2006ம் ஆண்டு தான், சந்துரு நியமிக்கப்பட்டார். இது குறித்து அவர் பேசும்போது இருமுறை நீதிபதிக்காக விண்ணப்பித்தேன். ‘இவர் தீவிரவாதிகளுக்கான வக்கீல்’ என்று சொல்லி அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா எனக்கு போஸ்டிங் போட மறுத்துவிட்டார் என தெரிவிக்கிறார். இதனையடுத்து 2006ல் ‘வழக்கறிஞர் என்பது தொழில். யாருக்காகவும் யாரும் வாதாடலாம். இதை காரணம் காட்டி நீதிபதி பொறுப்பை கொடுக்காமல் இருக்க முடியாது’என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவுடன் அவர் முதலில் செய்த காரியம், தன் சொத்து விவரங்களை தலைமை நீதிபதி எச்.என்.கோகலேவிடம் ஒரு சீலிட்ட கவரில் சமர்ப்பித்ததுதான். 




 96 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பு 


அவர் நீதிபதியாக பணிபுரிந்த காலத்தில் 96 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். அப்படியெனில் ஒரு நாளைக்கு 75 வழக்குகள். சராசரியாக மாதத்துக்கு 1500 தீர்ப்புகள். இந்தியாவிலேயே இவ்வளவு வழக்குகளுக்கு எந்த நீதிபதியும் தீர்ப்பு வழங்கியதில்லை. இவ்வளவு வழக்குகளுக்கு தீர்ப்பு எனில் அதற்கு தேவைப்படும் உழைப்பு மிகப்பெரியது. இது குறித்து ஆந்திராவைச் சேர்ந்த நீதிபதி ஒருவர், ‘இந்திய நீதிமன்றங்களின் சச்சின் சந்துருதான்... அவரது ஸ்கோரை முறியடிக்க யாருமில்லை’ என எழுதியுள்ளார். 


வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகள்


உயர் நீதிமன்றத்தின் சம்பிரதாயங்களையும், ஆடம்பர மரபுகளையும் உடைத்தெறிந்தவர் சந்துரு. தான் நீதிமன்றத்தினுள் நுழையும்போதும் வெளியில் செல்லும்போதும் தனக்கு பணிவிடை செய்வதற்காக வந்த ஊழியரை, அது ஆடம்பரம் என சொல்லி நிறுத்திவிட்டார். தனது பாதுகாப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர் மட்டுமல்ல, ஒரு கான்ஸ்டபிள் கூட வேண்டாம் என மறுத்துவிட்டார். நீதிமன்றத்தில் தன்னை மை லார்ட்’என அழைக்கக்கூடாது என வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டார்.  ஒருமுறை வழக்கறிஞர் ஒருவர் தன்னை நீதியரசர் என்ற அழைத்த போது, அந்த வார்த்தை தனிநபர் துதி, அதைப் பயன்படுத்தாதீர்கள் என்றார். "நீதிபதி, நீதியரசர்' என்கிற வார்த்தைகளை விட நீதி நாயகம் என அழைக்கப்படுவதைத்தான் விரும்பினார்.  இவர் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அதில் மேடை நாடங்களுக்கு, போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற தேவையில்லை, பஞ்சமி நிலங்களை, வேறு யாருக்கும் ஒதுக்கக் கூடாது, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்தில், இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும், கோவில்களில், பெண்கள் பூஜை செய்வதற்கு எந்த தடையும் இல்லை, மாட்டிறைச்சிக் கடைகள் நடத்த தடை இருந்ததை நீக்கிய தீர்ப்பு ஆகியவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. 




சொகுசு கார் வேண்டாம்...மின்சார ரயில் போதும்


இவர் ஓய்வுபெற்றபோது, வழக்கமாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும்போது 5 நட்சத்திர ஓட்டல்களில் நிகழும் பணி ஓய்வு பாராட்டு விழாவை வேண்டாம் என மறுத்து தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். நாடு விடுதலை அடைந்த பிறகு சென்னை இப்படி பிரிவு உபசார விழா வேண்டாம் என்று மறுத்த முதல் நீதிபதி சந்துருதான். ஓய்வுக்கு பின்னர் நீதித்துறை சம்பந்தமான பொறுப்புக்களை பெற மாட்டேன் என மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக சமுதாயப் பணி செய்வதையே விரும்புவதாகத் தெரிவித்தார். பணி ஓய்வு பெறும்போதும் தன் சொத்து கணக்கு விவரங்களை அறிக்கையாக அளித்தார். அப்போது, பதவி ஏற்கும்போது என் குடும்ப சொத்து விவரங்களை கொடுத்தேன். இப்போது என்னுடைய சொத்து விவரங்களை கொடுக்கிறேன். புதிதாக சொத்து வாங்கியதற்கான வருமான விவரங்களையும் குறிப்பிட்டுள்ளேன்” என்றார். பணி ஓய்வு பெறும் நாளில் தனக்கு வழங்கப்பட்ட சொகுசு காரை ஒப்படைத்துவிட்டு தன் நண்பர்களுடன் மின்சார ரயிலில் வீட்டுக்கு சென்றார்.