மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான எச். டி. தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


பாலியல் வீடியோ விவகாரம்: பல பெண்களை பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தி, அதை வீடியோவாக எடுத்ததாக பிரஜ்வல் மீது குற்றம்சாட்டப்பட்டுகிறது. இந்த விவகாரம் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், வெளிநாட்டுக்கு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட தனது சொந்த பேரனுக்கு தேவகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார். எங்கிருந்தாலும் இந்தியாவுக்கு திரும்பி வர வேண்டும் என்றும் இங்கு சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் தேவகவுடா வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து தேவகவுடா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த மே 18ஆம் தேதி, நான் கோயிலுக்கு பூஜை செய்யச் சென்றபோது பிரஜ்வல் ரேவண்ணாவைப் பற்றி ஊடகங்களிடம் பேசினேன். அவர் எனக்கும், எனது முழு குடும்பத்தினருக்கும், எனது சகாக்கள், நண்பர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கும் ஏற்படுத்திய அதிர்ச்சி மற்றும் வலியிலிருந்து மீள எனக்கு சிறிது நேரம் பிடித்தது.


பேரனுக்கு எச்சரிக்கை விடுத்த தாத்தா: குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டத்தின் கீழ் அவருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நாளில் இருந்து எனது மகனும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான எச்.டி. குமாரசாமி, இதை நிலைபாட்டைதான் வெளிப்படுத்தி வந்துள்ளார்.


கடந்த சில வாரங்களாக எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் எதிராக மக்கள் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். நான் அதை அறிவேன். நான் அவர்களை நிறுத்த விரும்பவில்லை. அவர்களை நான் விமர்சிக்க விரும்பவில்லை.


எல்லா உண்மைகளும் வெளிவரும் வரை அவர்கள் காத்திருந்திருக்க வேண்டும் என்று நான் அவர்களுடன் வாதிட முயற்சிக்க மாட்டேன். பிரஜ்வல் என்ன செய்கிறார் என்பது பற்றி எனக்கு தெரியாது என சொல்லி மக்களை நம்ப வைக்க முடியாது.


அவரைக் காக்க எனக்கு விருப்பம் இல்லை என்று அவர்களை நம்ப வைக்க முடியாது. அவர், எங்கிருக்கிறார் என்பது பற்றி எனக்குத் தெரியாது. அவருடைய வெளிநாட்டுப் பயணம் பற்றி எனக்குத் தெரியாது என்று என்னால் அவர்களை நம்ப வைக்க முடியாது. என் மனசாட்சிக்கு பதிலளிப்பேன் என்று நம்புகிறேன். நான் கடவுளை நம்புகிறேன், சர்வவல்லமையுள்ளவர் உண்மையை அறிவார் என்பதை நான் அறிவேன்.


இந்தத் தருணத்தில் என்னால் ஒன்றுதான் செய்ய முடியும். பிரஜ்வாலை கடுமையாக எச்சரித்து, அவர் எங்கிருந்தாலும் திரும்பி வந்து காவல்துறையில் சரணடையச் சொல்லலாம். அவர் தன்னை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.


இது நான் விடுக்கும் கோரிக்கை அல்ல, நான் விடுக்கும் எச்சரிக்கை. இந்த எச்சரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால், எனது கோபத்தையும், அவரது குடும்பத்தினர் அனைவரின் கோபத்தையும் அவர் சந்திக்க நேரிடும்" என குறிப்பிட்டுள்ளார்.