Thiruvalluvar Controversy: ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் இடம்பெற்றிருப்பது புது சர்ச்சையாக வெடித்துள்ளது. 'திருவள்ளுவர் தின விழா' என்ற பெயரில் ஆளுநர் மாளிகை அழைப்பிதழை வெளியிட்டுள்ளது.


மீண்டும் வெடித்த திருவள்ளுவர் சர்ச்சை:


நாளை மாலை 5 மணிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி தலைமையில் திருவள்ளுவர் தின விழா நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ்குமார் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் காவி உடை அணிந்தவாறு திருவள்ளுவரின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது.


திருவள்ளுவர் படத்தை மீண்டும் காவி நிறத்தில் வெளியிடப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவி உடையில் வள்ளுவர் படத்தை ஆளுநர் மாளிகை வெளியிட்டதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என தமிழ் அமைப்புகள் அறிவித்துள்ளன.


உலகப் பொதுமறை என திருக்குறள் போற்றப்படுகிறது. அதனை எழுதிய திருவள்ளுவர் வெள்ளை உடையணிந்தபடி இருக்கும் படம், தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 


புயலை கிளப்பும் ஆளுநர்:


இப்படியிருக்க, சமீபகாலமாக திருவள்ளுவரை மையப்படுத்தி தொடர் சர்ச்சை வெடித்து வருகிறது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நூலக நுழைவு வாயிலில் புதிதாக திருவள்ளுவர் படம் பொருத்தப்பட்டது.


வழக்கமான வெள்ளை நிற உடையணிந்த திருவள்ளுவர் படத்திற்கு பதிலாக, காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே, கோட் சூட்டில் உள்ள திருவள்ளுவரின் புகைப்படத்தினை பகிர்ந்து திருவள்ளுவர் தின வாழ்த்துகளை பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.


அதன் உச்சமாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ரவி, “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த, மதிப்புக்குரிய கவிஞரும், சிறந்த தத்துவஞானியும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


காலத்தால் அழிக்க இயலாத அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் வழிகாட்டியாகவும், உத்வேகத்தின் ஆதாரமாகவும் இருக்கிறது. இந்தப் புனித நாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.


ஆளுநரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில், "திருக்குறள் மற்றும் திருவள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை. திருவள்ளுவரை ஒரு துறவி என யாருமே கூறியது கிடையாது.


அவருக்கு திருமணம் ஆகி ஒரு மனைவி இருந்ததாகவும் கருத்து இருக்கிறது. இல்லறம் குறித்து அவரைப் போல கவித்துவமாக எழுதியிருப்பவர்கள் யாருமே இருக்க முடியாது. திருக்குறளை படித்து புரிந்து கொள்ளக்கூடிய நாம் அவரை துறவியாக பார்த்ததே கிடையாது. திருக்குறளில் எந்த ஒரு மத அடையாளமும் கிடையாது. சனாதனம் உள்ளிட்ட வேறு எந்த மதத்தையுமே நாம் அவர் மீது திணிக்க முடியாது" என்றார்.