அ.தி.மு.க.வின் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதி பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
மக்களவைத் தேர்தலில் பதில் வரும்:
அப்போது, அவர் கூறியதாவது, “அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். வழியில் பொதுச்செயலாளர் எடப்பாடியார் பொறுப்பேற்ற பிறகு இரண்டு கோடி தொண்டர்களை கொண்ட இயக்கமாக அ.தி.மு.க. இருக்கிறது. எனவே இதை ஒருமைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி தேர்தலில் களப்பணி ஆற்ற இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும்.
அதனால் பூத் வாரியாக இளைஞர் பாசறை, மகளிர் குழு தமிழ்நாடு முழுவதும் நிர்வாகிகள் போடப்பட்டு புயல் வேகத்தில் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு காலம் இருக்கிறது. அப்போது நீங்கள் என்னென்ன கேள்வி கேட்டீர்களோ? அத்தனைக்கும் பதில் வரும். அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும்.
கனிமொழியை நியமிக்கலாமா?
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முறிவில் அச்சத்தில் இருக்கிறது தி.மு.க. நெல்லிக்காய் மூட்டை மாதிரி கூட்டணி கட்சிகளை வைத்திருக்கிறார் ஸ்டாலின். அதை அவிழ்த்து விட்டால் சிதறும். தி.மு.க. கூட்டணியில் யாரும் உணர்வுப்பூர்வமாக இல்லை. தேர்தல் நெருங்க நெருங்க அங்கிருந்து பல கட்சிகள் அ.தி.மு.க.விற்கு வரலாம்.
காவிரி உரிமையை அன்றிலிருந்து இன்றுவரை பாதுகாப்பது அ.தி.மு.க. அதை தாரைவார்த்து கொடுத்தது தி.மு.க. தான். சோனியாகாந்தி சென்னை வந்த போது காவிரி விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் நிர்பந்தம் செய்திருக்கலாமே? பெண் உரிமை பற்றி பேசும் திமுக, உங்கள் கட்சி தலைவராக கனிமொழியை நியமனம் செய்யுங்களேன்.
இட ஒதுக்கீடு:
33 சதவீதம் இட ஒதுக்கீடு மத்தியில் கொண்டு வந்த போது அதற்கு முதல் கையெழுத்து போட்டது அ.தி.மு.க. அரசுதான். உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்கள் போட்டியிட கையெழுத்து போட்டது அ.தி.மு.க. அரசுதான். 17 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை ஏன் கொண்டு வரவில்லை. இப்போது மட்டும் வாய்கிழிய பேசுவது என்ன நியாயம்?”
இவ்வாறு அவர் பேசினார்.