பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”திமுக மகளிரணி சார்பில் சென்னையில் இன்று மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, இந்திய கம்யூனிஸ்ட் தேசியப் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் அரசியல் வாரிசுகள். மகளிர் உரிமை மாநாடு என்ற பெயரில் மகளிர் வாரிசு உரிமை மாநாட்டை நடத்துகின்றனர். வாரிசு அரசியலில் கூட, பெண்களை பின்னுக்குத்தள்ளி, தங்களது ஆண் வாரிசுக்குதான் முக்கியத்துவம் அளிப்பதுதான் இண்டி கூட்டணி கட்சிகளின் அரசியல் பாரம்பரியம்.


நீண்டகால அரசியல் அனுபமும், திறமையும் கொண்ட கனிமொழி, திமுகவில் இப்போது எந்த இடத்தில் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். திமுகவுக்கு உள்ளேயே தனது உரிமைக்காக போராட வேண்டிய நிலையில் அவர் இருக்கிறார். மகள் இருந்தும் மகன் உதயநிதியை தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் வாரிசாக்கியுள்ளார். பாஜக ஆட்சியில் தான் பெண்களின் கனவான நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வீடுகள்தோறும் கழிவறை திட்டம், வீடுகள்தோறும் சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம், வீடுகள்தோறும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு, வீடுகள்தோறும் மின் இணைப்பு, அனைவருக்கும் வங்கிக் கணக்கு என அடிப்படை வசதிகள் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியில் தான் சாத்தியமாகியுள்ளது. இந்த திட்டங்களால் பெண்களுக்கு பெரும் விடுதலை கிடைத்துள்ளது. அவர்களின் கெளரவம், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


பெண்கள் யாரையும் சார்ந்திருக்காமல், வீட்டிலேயே முடங்கியிருக்காமல் சொந்தக் காலில் நிற்கும் வாய்ப்பை பிரதமர் நரேந்திர மோடி அரசு ஏற்படுத்தியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக பிரதமர் மோடி அமைச்சரவையில்தான் 11 பெண்கள் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். 140 கோடி மக்களின் வரவு - செலவுகளை கவனிக்கும் நிதி அமைச்சராக பெண் தான் இருக்கிறார். இப்படி மகளிர் உரிமையை செயலில் காட்டியிருக்கிறது மோடி அரசு. 55 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் மகளிர் உரிமைக்காக எதுவும் செய்யாமல், தேர்தல் வருகிறது என்றதும் மகளிர் உரிமை மாநாடு என நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கி விட்டார். இனி எந்த நாடகமும் பெண்களிடம் எடுபடாது.


’அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் ரூ. 1,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்’ என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், இப்போது 50 சதவீதத்திற்கும் அதிகமான மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. மகளிர்க்கு உரிமைத் தொகை வழங்காமல், மகளிர் உரிமை மாநாடு நடத்துகிறார்கள். கர்நாடகத்தில் பாஜக ஆட்சி இருக்கும் வரை காவிரி பிரச்னை இல்லை. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கர்நாடகத்தில்  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் காவிரி பிரச்னை வந்து விட்டது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மறுக்கிறார்கள். அவர்கள் இருவரும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள்.


சென்னை வந்துள்ள சோனியா, பிரியங்காவிடம், காவிரி மேலாண்மை வாரியம், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உதவுமாறு முதலமைச்சர் ஸ்டாலின், கனிமொழி வலியுறுத்துவார்களா? தமிழகத்தின் உரிமையை பறிகொடுத்து விட்டு, மகளிர் உரிமை மாநாடு நடத்துகிறது திமுக. இன்று திமுக நடத்துவது மகளிர் உரிமை மாநாடு அல்ல. மகளிர் வாரிசு உரிமை மாநாடு. தேர்தல் ஆதாயத்திற்காக நடத்தப்படும் நாடகம்” எனத் தெரிவித்துள்ளார்.