பொய்யில் பிறந்து, வளர்ந்து, பொய்யே உருவான ஒரு உருவம் என்றால் அது சசிகலா தான் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுமார் 30 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்து இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட 14 நாடுகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளை பலமாக தாக்கியது. தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் சுனாமி தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர்.
இதனிடையே இன்று இன்று 18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கடலோரப் பகுதியில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை காசிமேட்டில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், பண்ருட்டி ராமச்சந்திரன் அனைத்து அணிகள் இணைந்தாலும் அதிமுக வெற்றி பெறாது என சொன்னது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவும், எம்.ஜி.ஆரும் தான் தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டினர். அவர் எல்லா கட்சிக்கும் சென்று வந்தவர். கட்சிக்கு விசுவாசமாக அவர் இருக்க வேண்டும். அதிமுகவில் எல்லா அணிகளும் சேர்ந்தாலும் அதிமுக வெற்றி பெற முடியாது என சொல்கிறார். இதில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திமுகவின் பி டீம் ஆக இருக்கிறாரோ என்ற கேள்வி எழுகிறது. நீங்க எப்படி வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் உங்களை வளர்த்த அதிமுகவை சிறுமைப்படுத்தாதீர்கள் என ஜெயக்குமார் தெரிவித்தார்.
தொடர்ந்து அதிமுக இணைய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சசிகலா சொன்னது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கட்சிக்கு எந்தவித சம்பந்தம் இல்லாதவர் சசிகலா. அவர் சொன்னது அனைத்தும் பொய். பொய்யில் பிறந்து, வளர்ந்து, பொய்யே உருவான ஒரு உருவம் என்றால் அது சசிகலா தான் என ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார்.
இதனையடுத்து தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அதிமுக அரசில் பாரபட்சம் இல்லாமல் அனைவரும் பொங்கல் பரிசு தொகுப்பு கொடுக்கப்பட்டது. அமைச்சர் எ.வ.வேலு கொடுத்த விளக்கம் நிர்வாக நடத்த தெரியாத அரசு செயல்படுவதாக அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது போல உள்ளது. அரசின் பரிசுத் தொகுப்பை நம்பி கரும்பு பயிரிட்ட விவசாயிகள் என்ன செய்வார்கள் என ஜெயக்குமார் கேள்வியெழுப்பினார்.