தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா எழுதிய 'மாமனிதர் நேரு' நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.


எனது அரசியல் வாரிசு நேரு- காந்தி


இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், மிகச்சிறந்த ஜனநாயகவாதியாகவும் - இந்தியத் துணைக்கண்டத்தின் பன்முகத்தன்மையைப் போற்றியவருமாக விளங்கியவர் பண்டித ஜவகர்லால் நேரு.


அவதூறுகளை பரப்பி போலி வரலாற்றைப் புனைந்து பிற்போக்கு தனங்களை உயர்த்திப் பிடிக்க அடிப்படைவாதிகள் முயலும் காலத்தில் பண்டித நேருவின் வாழ்வை அனைவரும் அறிந்திட கோபண்ணா எழுதிய 'மாமனிதர் நேரு' நூல் அவசியமானது. எனது அரசியல் வாரிசு நேருதான் என்றும் அவரது கரங்களில் தேசம் பாதுகாப்பாக உள்ளது என்றும் காந்தியடிகள் கூறியதாக இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால்தான்,இன்று வரை நேருவின் புகழ் நிலைத்து நிற்கிறது.




ஒரே மொழி, ஒரே இனம், ஒரே மதம்,ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு , ஒற்றை சட்டம் ஆகிய அனைத்திற்கும் எதிராக இருந்தவர் நேரு. வகுப்பு வாதமும், தேசிய வாதமும் சேர்ந்திருக்க முடியாது என்று கூறியவர். அதனால்தான் மதச்சார்பற்றவர்களால் நேரு போற்றப்படுகிறார்.


”இந்தி திணிக்கப்படாது என வாக்குறுதி”


திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கையே சமூக நீதி, அதனடிப்படையில் திராவிட இயக்கத்தினரின் போராட்டத்தின் விளைவாக, அரசியலமைப்பு சட்டத்தில் முதல் திருத்தத்தை நேரு கொண்டு வந்தார். சமூகத்திலும் கல்வியிலும் பின் தங்கியவர்களுக்கு செய்யும் ஏற்பாடுகள் எதுவும் சட்டப்படி தடை செய்யப்படாது என்பதுதான் அந்த திருத்தம். தமிழ்நாடு போட்ட விதையை விருட்சமாக்கியவர். இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தி திணிக்கப்படாது என வாக்குறுதி கூறியவர் நேரு.


திமுக போராட்டம் - நேரு கடிதம்:




1960 ஆம் ஆண்டு இந்தி திணிப்பை எதிர்த்து திமுக போராட்டம் நடத்தி வந்தது. அப்போது, தமிழ்நாடு வரவிருந்த குடியரசு தலைவருக்கு கருப்பு கொடி காட்ட திட்டமிடுகிறார் அண்ணா. இதை அறிந்த நேரு, கம்யூனிஸ்ட் உறுப்பினர் தங்கமணி, கழக உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் சம்பத்தை அழைத்து போராட்டம் நடத்த வேண்டாம் என கூறுகிறார்.


அப்படியானால், இந்தியை திணிக்க வேண்டாம் என எழுதி கொடுங்கள் என கூறுகிறார் சம்பத். அதற்கு சரி என்று, நீங்களே எழுதுங்கள் நான் கையொப்பம் இடுகிறேன் என்கிறார் நேரு. அதற்கு, பிரதமரின் கடிதத்தை எழுதுவது சரியல்ல, நீங்களே எழுதி தாருங்கள் என்கிறார் சம்பத். சரி நீங்கள் செல்லுங்கள், நான் கடிதம் அனுப்புகிறேன் என்றார் நேரு. அப்போது மணி மதியம் 12.30 மணி, நாடாளுமன்றம் முடிந்த 4 மணிக்கு வீட்டுக்கு செல்கிறார் சம்பத், 4.10க்கு நேருவிடம் இருந்து கடிதம் வருகிறது. அதில் இந்தி பேசாத மக்களுக்கு அளித்த வாக்குறுதியில் அரசு உறுதியாக உள்ளது என எழுதி கையொப்பமிட்டுள்ளார் நேரு.


இந்த சம்பவம் 3.08.1960 ஆம் ஆண்டு நடந்தது. இந்த சம்பவம் நடந்த 7 ஆம் நாள், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில், நேரு கடிதத்தை அண்ணா வாசித்து காண்பிக்கிறார். அப்போது, உலக தலைவர்களை எல்லாம் கைப்பற்றிய நேருவின் கரம் எழுதிய கடிதம் இது என்றார்.


500 எம்.பி-க்கள் இருக்கும் நாடாளுமன்றத்தில், 2 எம்.பி-க்கள் மூலம் திமுக பெற்ற சாதனை என்று அண்ணா கூறினார். நாங்கள் நேருவின் பெருமையை போற்றுவதற்கு இதுதான் காரணம்


"நேருவின் அருமையை உணர முடிகிறது" 


இந்தி திணிப்பு, இன்றைய அரசின் நிலையை பார்க்கும்போது, நேருவின் அருமையை உணர முடிகிறது.


ஐந்தாண்டு திட்டம் மூலம், அனைத்து பகுதிகளிலும் நேரு அறியப்பட்டார். தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வருவதாக சொன்ன பா.ஜ.க. அரசு, இன்றளவும் நிறைவேற்றவில்லை. இதை ஒப்பிட்டால் நேருவின் பெருமையை உணர முடியும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.


தமிழ்நாட்டுக்கு பெரியார், அண்ணா, கலைஞர் தேவைப்படுவதை போல, இந்தியாவுக்கு நேரு, காந்தி தேவைப்படுகிறார்.




கோட்சேவின் வாரிசுகள்:


மேலும், ராகுல் காந்தியின் பேச்சு, நேரு பேச்சு போல் உள்ளது, நேருவின் வாரிசு பேசுவதை கோட்சேவின் வாரிசுகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கூட்டாட்சி, மாநில சுயாட்சி, சமூக நீதியை நிலைநாட்ட நேரு தேவைப்படுகிறார் என்று புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.


மகாத்மா காந்தி, பண்டித நேரு உள்ளிட்டவர்கள் காண விரும்பிய முற்போக்கு இந்திய சமுதாயம் அமைந்திட நமது ஒற்றுமை பயணத்தை தொடருவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.