ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் மருத்துவமனைகளில் பிறந்த பச்சிளங் குழங்கள் அனைத்தும் பதுங்கு குழிக்குள் மாற்றப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று அறிவித்தார். அவரின் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகர் மீது, மற்ற சில பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் ஏராளமான சேதம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து வருகிறது.
உக்ரைன் மீது குண்டு மழை பொழியும் வீடியோக்களும், அதிரும் கட்டிடங்களின் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், ரஷ்ய படையெடுப்பில் இதுவரை 10 இராணுவ அதிகாரிகள் உட்பட 137 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 316 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைன் நடத்திய பாதுகாப்புத் தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், 30க்கும் மேற்பட்ட ரஷ்ய டாங்கிகள், ஏழு ரஷ்ய விமானங்கள் மற்றும் ஆறு ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்றைய தாக்குதலை தொடர்ந்து இன்று ரஷ்யா, உக்ரைனில் 2வது நாள் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் மருத்துவமனைகளில் பிறந்த பச்சிளங் குழங்கள் அனைத்தும் பதுங்கு குழிக்குள் மாற்றப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் ஒப்லாஸ்ட் குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்து இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன. சில மணி நேரங்களுக்கு முன்பு பிறந்த பச்சிளம் குழந்தைகள் அனைத்தும், மிகச்சிறிய அறை அளவிலான இடத்தில் உள்ள பதுங்கு குழிக்கு மாற்றப்பட்டன.
வீடியோவில், மருத்துவமனையின் பச்சிளங்குழந்தைகள் பிரிவு தலைவரான மருத்துவர் டெனிஸ் சுர்கோவ் பேசும்போது, "பதுங்கு குழிக்குள் பச்சிளம் குழந்தைகள் பிரிவு. இதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?
நாங்கள் குழப்பத்துடனும் பதற்றத்துடனும் இருக்கிறோம்" என்று கூறுகிறார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
"என் மகளைப் பாதுகாப்பான இடத்துக்கு அழைச்சிட்டுப் போங்க" என்று ராணுவத்தில் பணியாற்றும் உக்ரேனிய மனிதர் ஒருவர் தனது மகளைக் கட்டிப்பிடித்து அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.