அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவுபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு தடை கோரும் ஓபிஎஸ் தரப்பு மனு மீதான வழக்கு இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 


பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு:


அதிமுகவின் பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி சனிக்கிழமை ( மார்ச் 17 ) அறிவிக்கப்பட்டு, வரும் மார்ச் 26-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.


வேட்பும்னுதாக்கல் இன்று ( மார்ச் 19 ) மாலையுடன் நிறைவு பெறுகிறது. எதிர்க்கட்சி தலைவர் எட்பாடி பழனிசாமி நேற்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.


இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓபிஎஸ் தரப்பான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் உயிர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். 


விடுமுறை தினம் என்றபோதிலும், அவசர வழக்காக கருதி சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொண்டது. இந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்து வந்தார். 


தேர்தலை நிறுத்த வேண்டும்:


ஜெயலலிதாவே நிரந்தர பொதுச் செயலாளர் என்பதே தொண்டர்களின் விருப்பம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகித்த பதவியை வேறு யாரும் வகிக்க முடியாது. இடைக்கால பொதுச்செயலாளர் என யாரையும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. 


பொதுச் செயலாளர் பதவிக்கு சாதாரண உறுப்பினர்கள் போட்டியிட முடியாத நிலையை உருவாக்கி உள்ளனர். 


இந்நிலையில், தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்  என ஒபிஎஸ் தரப்பினர் வாதம் வைத்தனர்.


இபிஎஸ் தரப்பு வாதம்:


உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 3 பேரும் வழக்கு தொடர உரிமையில்லை எனவும், ஓபிஎஸ் நேரடியாக வழக்கை தொடரவில்லை. 1.5 கோடி தொண்டர்களில் 1 சதவீதம் கூட ஓபிஎஸ்-க்கு ஆதரவு இல்லை.


பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறி பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோர முடியாது.


ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக அறிவித்துவிட்டு மீண்டும் அப்பதவியை கொண்டு வருவதாக கூறுகின்றனர். ஏன் கொண்டு வரக்கூடாது என்ற காரணத்தை ஓ.பன்னீர்செல்வம்  தரப்பினர் தெரிவிக்கவில்லை. சூழ்நிலைகள் கருதி சட்ட விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என இபிஎஸ் தரப்பினர் வாதங்களை வைத்தனர்.




தேர்தலை நடத்தலாம்:


2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற தொடர் விசாரணைக்கு பின் நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பை வாசித்தார்.


அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம், ஆனால் முடிவை அறிவிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவிட்டார்


இதையடுத்து, பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கை ஏப்ரல் 11-க்கு பதிலாக மார்ச் 22-ம் தேதி விசாரித்து, மார்ச் 24 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார்.