சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவடத்தூர் பகுதியில் அதிமுக சார்பில் புதிய கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது.


இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசியது, "திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றி கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்துள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இதுவரை எந்த ஒரு புதிய திட்டங்களில் கொண்டு வரவில்லை. திமுக அறிவித்த அறிவிப்புகளை நம்பி மக்கள் ஏமாற்றது தான் இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியின் சாதனையாகும்.


மத்தியில் காங்கிரசும் தமிழகத்தின் திமுகவும் இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது . சாதனை மேல் சாதனை படைத்த இயக்கம் என்றால் அது அதிமுக தான். ஏழை மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் நேசகரம் நீட்டியது அதிமுக ஆட்சி தான் மக்களுக்காக துவக்கப்பட்ட கட்சி அதிமுக என்று பேசியவர் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவருக்கும் பிள்ளைகள் கிடையாது மக்களை தான் பிள்ளைகளாக பார்த்தார்கள் கட்சியை உருவாக்கி பல சாதனைகளை படைத்தார்.



குடும்ப ஆட்சி:


திமுகவை பொறுத்தவரை வாரிசு அரசியல், அமைச்சர்கள் மற்றும் அவர்கள் மகன்கள் தொடர்ந்து பதவியில் இருந்து வருகிறார்கள். அதிமுகவில் அது போன்று இல்லை அனைவருக்கும் வாய்ப்புள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நிறைய பிள்ளைகள் முதல் பேரப்பிள்ளைகள் வரை உள்ளனர். கருணாநிதி முதல்வராக இருந்தார் அடுத்ததாக ஸ்டாலின் முதல்வராக பதவி சூட்டிக்கொண்டார். தற்பொழுது உதயநிதியை முதலமைச்சராக போகிறார்கள். வேறு ஆளே கிடையாதா?


தமிழகத்தில் எல்லோருக்கும் உரிமை உள்ளது, இது ஜனநாயக நாடு, திமுக குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் பதவிக்கு வரவேண்டுமா? இது சர்வதிகார நாடு கிடையாது, அரசு பரம்பரை கிடையாது, ஜனநாயக நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும் உரிமை உண்டு.ஒரு குடும்பத்தில் பிறந்தவர்கள் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் வந்தால் நாடு சீரழிந்துவிடும். சர்வாதிகார ஆட்சியாக மாறிவிடும், சர்வதிகாரியாக யாரும் இருக்க கூடாது என்று தான் மக்களுடைய ஆசை, அதை வருகின்ற தேர்தலில் பிரதிபலிக்க வேண்டும்.


அமைச்சர் செந்தில்பாலாஜி நடிப்பு:


திமுகவிற்காக உழைத்த எத்தனையோ அமைச்சர்கள் உள்ளார்கள், முன்னாள் அமைச்சர்கள் அவர்களுக்கெல்லாம் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் அதிமுகவில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு நிச்சயம் எதிர்காலத்தில் பதவி உண்டு. தமிழகத்தில் முப்பதாயிரம் கோடி சுழன்று சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் தான் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு உள்ளார்.


என்னென்னமோ நாடகம் நடித்து வருகிறார்கள், உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறுவது உண்மையான மனசாட்சி உள்ள மனிதர்களுக்கு எதார்த்த நிலை. ஆனால் அது உண்மையா? பொய்யா? என்பது விரைவில் தெரியவரும்.



கைதி அமைச்சராக இருக்கலாமா?


தமிழகத்தில் எல்லாத் துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது, ஊழல் நடைபெறாத துறையே கிடையாது. அதனால்தான் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை, இனியாவது மக்களை பாருங்கள், என்ன நடக்கிறது என்பதையாவது பாருங்கள் என பேசினார். அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் செய்து அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டவர். கைதி அமைச்சராக இருக்கலாமா? தமிழகத்திற்கு எவ்வளவு பெரிய அவமானம். ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் தலைகுனிவு.


இதற்கு முன்பாக திமுக, அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டவர்கள் அமைச்சரவிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊழல் புரிந்தவர்கள் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுவது தான் தார்மீக நீதி. ஆனால் தற்பொழுது உள்ள தமிழக முதல்வர் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை, அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டால், அமைச்சர் செந்தில் பாலாஜி வாய் திறந்துவிட்டால் கோட்டையில் இருப்பவர் வேறு இடத்திற்கு சென்றுவிடுவார்.


பதில் அளிப்பாரா?


தமிழக முதல்வர் எழுதி கொடுத்து படிக்கிறார். ஒரு மணி நேரம் பேசுவாரா? என்று பார்ப்போம், இருவரும் மேடைபோட்டு பேசலாம் குற்றச்சாட்டை வையுங்கள், எல்லாம் துறைகளை பற்றி கேட்டாலும் உடனடியாக பதில் அளிக்கிறேன். ஆனால் தமிழக முதல்வர் நான் கேட்கும் கேள்விக்கு பதில் அளிப்பாரா? தமிழக முதல்வர் சட்டமன்றத்திலே பேசுவதில்லை. சட்டமன்றத்தில் இரண்டே முக்கால் மணி நேரம் கேள்வி எழுப்பினேன், இன்னும் எவ்வளவு நேரம் பேசுவீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார்.


அந்தளவிற்கு குறைகள் உள்ளது, மக்கள் குறைகளை கூறுகிறார்கள். அதை எதிர்க்கட்சித் தலைவராக நான் கேள்வியாக எழுப்புகிறேன். கேள்வி கேட்பதற்கான உரிமையும் பொறுப்பை மக்கள் கொடுத்துள்ளார்கள். மேஜையை தேய்ப்பதற்காக நான் வரவில்லை மக்களின் குறைகளை அரசாங்கத்திடம் கூற வேண்டும் அதை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய லட்சியம். எனவே பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார் என்று செய்தியை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் வாய்ப்பை தர வேண்டும்."


இவ்வாறு அவர் பேசினார்.