சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.



முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போராடி,வாதாடி 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற வரலாற்று தீர்ப்பை தமிழக மக்களுக்கு பெற்று தந்தார்.


உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, அணையை பலப்படுத்த அதிமுக அரசின் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வந்தது இந்த பணிகளை செய்யவிடாமல் கேரள அரசு தடை போட்டு வந்தது தமிழ்நாடு பொதுப்பணித்துறை செயலாளர், கேரள பொதுப்பணித்துறை செயலாளர் மற்றும் கேரள அதிகாரிகள் நேரில் பேசி அணையை பலப்படுத்தும் பணியை தொடர்ந்து நடத்த வலியுறுத்தினார்கள். இந்நிலையில் நடந்து முடிந்த தமிழ்நாடு பொதுத்தேர்தலில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து திமுக பதவியேற்றுள்ளனர். தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்கும் வகையில் திமுக அரசு தொடர்ந்து வருவதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



மேலும் மேட்டூர் அணை 120 அடியை எட்டியவுடன் அதன் வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டத்தின் வடிநிலத்திலுள்ள நூறு வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு 565 கோடி மதிப்பீட்டில் பணியினை செயல்படுத்தும் வண்ணம் பணிகள் துரிதமாக நடைபெற்ற முதல் கட்ட பணிகள் முடிந்தது. இவ்வாண்டு கடந்த சில நாட்களாக மேட்டூர் அணை 120 அடியை எட்டிய நிலையில், இதுவரை மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 ஏரிகளுக்கு நீரேற்று பாசனம் மூலம் தண்ணீர் திறந்துவிடாத திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.



நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தமிழகம் எங்கும் வாக்காளர்களை சேர்த்தல் நீக்கல், முகவரி மாற்றம் போன்ற பணிகள் வரும் 13, 14 ஆகிய இரு நாட்கள் மற்றும் இம்மாத இறுதி 27 மற்றும் 28 ஆகிய இரு நாட்கள் என்று மொத்தம் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது அது சமயம் மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய, கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள். அனைவரும் கிளைக் கழகம் முதல் மாவட்ட கழகம் வரை உள்ள அனைத்து நிர்வாகிகளும் இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்களையும், தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர்களையும் மற்றும் கழக செயல்வீரர்களையும் ஒன்றிணைத்து அவரவர் பகுதிகளில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் முழு ஈடுபடுவதுடன் முகவரி, மாறிய வாக்காளர்கள் மற்றும் இறந்த வாக்காளர்களை நீக்குவது ஆகிய பணிகளை மேற்கொள்வதுடன் தகுதி உள்ள அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது.


கூட்டத்தில் மாநில கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் செம்மலை, அதிமுக மாநகர், பேரூராட்சி, ஒன்றிய செயலாளர்கள் பங்கேற்றனர்.