மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் ஆளுங்கட்சியான பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அவரை மாவட்ட ஆட்சியர் மன உளைச்சலில் ஆழ்த்தியுள்ளதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.  


மத்தியப் பிரதேச மாநிலத்த்ன் சாண்ட்லா சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ ராஜேஷ் பிரஜாபதி மாநிலத்தின் ஆளும் கட்சியான பாஜகவைச் சேர்ந்தவர். மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்ட ஆட்சியர் ஷீலேந்திர சிங்கின் அலுவலகம் முன்பு பாஜக எம்.எல்.ஏ ராஜேஷ் பிரஜாபதி இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ ராஜேஷ் பிரஜாபதி மாவட்ட ஆட்சியர் தன்னை எதுவும் செய்துவிடக் கூடும் என அச்சப்படுவதாகத் தெரிவித்தார். `அவர் என்மேல் எந்த வழக்குகளை பொய்யாக போடுவதோடு, என்னை அதன்மூலம் தொந்தரவு செய்யவும் முடியும். அவர் ஹோஷங்காபாத் துணை மாஜிஸ்திரேட்டிடம் எவ்வாறு நடந்துகொண்டார் என்பது அனைவரும் அறிந்தது. எனது உயிர் ஆபத்தில் இருக்கிறது’ என்றும் எம்.எல்.ஏ ராஜேஷ் பிரஜாபதி தெரிவித்துள்ளார். 



கடந்த 2019ஆம் ஆண்டு, ஹோஷங்காபாத் மாவட்டத்தின் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றியவர் தற்போதைய சத்தர்பூர் மாவட்ட ஆட்சியராக இருக்கும் ஷீலேந்திர சிங். இவர் ஹோஷங்காபாத்தில் பணியாற்றிய போது, அவருக்குக் கீழ் பணியாற்றிய துணை மாஜிஸ்திரேட் ரவிஷ் ஸ்ரீவத்சவா திடீரென பணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ஷீலேந்திர சிங்கின் வீட்டிற்குக் கேட்கச் சென்ற போது, அவர் தன்னைப் பிணைக் கைதியாக பிடித்து வைத்ததாகக் குற்றம் சாட்டினார். எனினும், ஷீலேந்திர சிங் தன் மீதான புகார் பொய் என்றும், ரவிஷ் ஸ்ரீவத்சவா பணியில் ஒழுங்காக இல்லை என்பதால் நீக்கப்பட்டார் என்றும் கூறி இந்த சர்ச்சையை முடித்து வைத்தார். தற்போது அவர் மீது புதிய சர்ச்சையாக தற்போதைய நிகழ்வு ஏற்பட்டுள்ளது.


நேற்று இரவு சத்தர்பூர் மாவட்ட ஆட்சியர் ஷீலேந்திர சிங்கின் வீட்டிற்கு முன்பு, பாஜக எம்.எல்.ஏ ராஜேஷ் பிரஜாபதி தர்ணாவில் ஈடுபட்டார். தான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக, மாவட்ட ஆட்சியர் ஷீலேந்திர சிங் தன்னைச் சந்திக்க மறுப்பதாகவும் எம்.எல்.ஏ ராஜேஷ் பிரஜாபதி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 



பாஜக எம்.எல்.ஏ ராஜேஷ் பிரஜாபதி தான் மாவட்ட ஆட்சியரைச் சந்திப்பதற்காக மாலை 5 மணி முதல் காத்திருப்பதாகக் கூறியுள்ளார். `என் தொகுதி விவகாரமாக நான் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க முயன்று கொண்டிருக்கிறேன். எனினும் அவர் என்னைச் சந்திக்க மறுக்கிறார். நான் ஆட்சியர் அலுவலகம் சென்ற போது, மாவட்ட ஆட்சியர் முதலமைச்சரோடு வீடியோ கான்பரென்சிங் சந்திப்பில் இருப்பதாகத் தெரிவித்தனர். அவருக்காக நான் காத்திருந்த போதும், அவர் என்னைச் சந்திக்காமல் சென்றுவிட்டார். அவரது வீட்டுக்குச் சென்ற போது, மாவட்ட ஆட்சியர் வீட்டில் இல்லை என்று எனக்கு கூறப்பட்டது. ஆனால் சிறிது நேரம் கழிந்த பின், வீட்டிற்குள் இருந்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்தார். என்னைத் தலைமைச் செயலாளர் கூட மதிக்காமல் இருந்தது இல்லை. ஏன் ஒரு தலித் எம்.எல்.ஏவின் குரல் கேட்க மறுக்கப்படுகிறது?” என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் பாஜக எம்.எல்.ஏ ராஜேஷ் பிரஜாபதி.