காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் நிருபமிடம் முன்னாள் சி.ஏ.ஜி வினோத் ராய் 2ஜி விவகாரத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.
சஞ்சய் நிருபம் இந்த விவகாரத்தில் தாக்கல் செய்திருந்த அவதூறு வழக்கில் பதிலளிக்கும் விதமாக வினோத் ராய் இந்த மன்னிப்புக் கடிதத்தை நோட்டரி அங்கீகாரம் பெற்றிருந்த பத்திரத்தாளில் அனுப்பியுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு, 2ஜி விவகாரம் உச்சத்தில் இருந்த போது சி.ஏ.ஜி வினோத் ராய் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரான சஞ்சய் நிருபம் வினோத் ராய்க்கு அழுத்தம் கொடுத்து அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயரை 2ஜி வழக்கில் இருந்து நீக்க வைத்ததாகக் கூறியிருந்தார். அவர் இவ்வாறு தொலைக்காட்சி நேர்காணல்களில் கூறியிருந்ததோடு, இந்த விவகாரம் தொடர்பாக அவர் எழுதியிருந்த Not Just an Accountant: The Diary of the Nation’s Conscience Keeper என்ற புத்தகத்திலும் சஞ்சய் நிருபம் தன் மீது அழுத்தம் கொடுத்ததாக வினோத் ராய் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சஞ்சய் நிருபம், வினோத் ராய் அனுப்பிய கடிதத்தையும் இணைத்திருந்தார். மேலும் அந்தப் பதிவில் அவர், `2ஜி வழக்கு, நிலக்கரி ஒதுக்கீடு முதலான விவகாரங்களில் காங்கிரஸ் அரசு மீது போலியான அறிக்கைகளைச் சமர்பித்ததற்காக வினோத் ராய் இந்தத் தேசத்திடம் மன்னிப்பு கோர வேண்டும்.’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
.இதுகுறித்து பேட்டியளித்த சஞ்சய் நிருபம், `வினோத் ராய் அனுப்பிய கடிதம் குறித்து நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளேன். நீதிமன்றம் எனது வாக்குமூலத்தைப் பெற்றுள்ளதோடு, வழக்கையும் முடித்து வைத்துள்ளது.
வினோத் ராய் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் போது, நிலக்கரி ஒதுக்கீட்டின் தணிக்கையின் போது, அவற்றில் மோசடி நிகழ்ந்ததாகக் குற்றம் சாட்டினார். மேலும், 2ஜி வழக்கில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது பூதாகரமானது.
கடந்த அக்டோபர் 23 அன்று, வினோத் ராய் சஞ்சய் நிருபம் குறித்து 2014ஆம் ஆண்டு சில குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகக் கூறினார். `2ஜி விவகாரத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயரை சி.ஏ.ஜி அறிக்கையில் இருந்து நீக்குமாறு அழுத்தம் கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுள் சஞ்சய் நிருபம் ஒருவர் எனத் தவறுவதலாக குறிப்பிட்டிருந்தேன்’ என்று கூறியதோடு தான் அப்போது முன்வைத்த குற்றச்சாட்டுகளின் தகவல்களில் பிழை இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். `எனது கருத்துகள் சஞ்சய் நிருபம், அவரது குடும்பம், நண்பர்கள் ஆகியோருக்கு வலியை ஏற்படுத்தியதை உணர்கிறேன். எனவே அவர்கள் அனைவரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருகிறேன்’ என்று தனது கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளார் வினோத் ராய்.
வினோத் ராயின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாகக் கூறிய சஞ்சய் நிருபம் இந்நாள் பொன் நாள் எனக் கூறியுள்ளதோடு, வினோத் ராயின் 2ஜி விவகாரம் குறித்த முழு அறிக்கையும் பிழையானது எனவும் கூறியுள்ளார்.