கோவா மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. 2017-ம் ஆண்டு நடைபெற்ற கோவா சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 17 இடங்களை காங்கிரஸ் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் 13 இடங்களைப் பெற்ற பாஜக, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. காங்கிரஸ் மேலிடத்தின் மெத்தனப் போக்கால்தான் கோவாவில் ஆட்சி அமைக்க முடியாமல் போனதாக விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 4 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி தமது செல்வாக்கை கோவாவில் படிப்படியாக இழந்துவிட்டதாகவே கூறப்படுகிறது. 


கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு உதவுவதற்காகப் பல்வேறு உத்திகளை பிரசாந்த் கிஷோர் வகுத்து வருகிறார். இந்நிலையில் கோவாவுக்கு நேற்று பிரசாந்த் கிஷோர் சென்றிருந்தார். அப்போது கோவா அருங்காட்சியகத்தில் கலந்துரையாடல் நடந்தது.



அதில் பேசிய பிரஷாந்த் கிஷோர்," இந்தியாவில் பா.ஜ., இன்னும் 10 ஆண்டுக்கு வலுவான, சக்திமிக்க கட்சியாக இருக்கும். அந்தக் கட்சியுடன் இன்னும் நாம் பல ஆண்டுகளுக்குப் போராட வேண்டியதிருக்கும். பா.ஜ., அடுத்துவரும் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், தேசிய அரசியலில் அந்தக் கட்சிதான் மையமாக இருக்கும். மோடியை வேண்டுமானால் மக்கள் தூக்கி எறிய வாய்ப்புண்டு. ஆனால், பா.ஜ., எங்கும் போகாது. மக்கள் மோடியைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்று ராகுல் நினைக்கிறார். ஆனால், அது நடக்காது. மோடியின் வலிமை என்ன? என்பதை அறிந்து, புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்துக்கு ராகுலால் ஒருபோதும் போட்டியிட முடியாது. அவரைத் தோற்கடிக்கவும் முடியாது. நான் பார்த்தவரை பிரச்சினை என்னவென்றால், பெரும்பாலானோர் பிரதமர் மோடியின் பலத்தையும், அவரை பிரபலமாக்குவதற்கும் என்ன காரணம் என்பதைப் புரிந்துகொள்வதற்கும் போதுமான நேரத்தைச் செலவிடுவதில்லை. இதைப் பற்றி நீங்கள் தெரிந்தால் மட்டுமே, நீங்கள் அவருக்குத் தகுந்த போட்டியை அளிக்க முடியும்.



காங்கிரஸ் கட்சியில் உள்ள எந்தத் தலைவர் அல்லது மாநிலத் தலைவரிடம் சென்று மோடியின் எதிர்காலம், பாஜகவின் எதிர்காலத்தைப் பற்றிக் கேளுங்கள். அவர்கள் என்ன சொல்வார்கள் என்றால், “எல்லாம் காலம் பார்த்துக் கொள்ளும். மக்கள் பாஜக ஆட்சி மீது வெறுப்படைந்து, அரசுக்கு எதிராக அதிருப்தி உருவாகும். அப்போது மக்கள் அவர்களைத் தூக்கி எறிவார்கள்” என்று கூறுவார்கள். ஆனால், எனக்கு இதில் சந்தேகம் இருக்கிறது.





மக்கள் பாஜகவையும், மோடியையும் தூக்கி எறியமாட்டார்கள். தேர்தலைப் பொறுத்தவரை நாட்டில் உள்ள வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் போதும். ஆதரவளித்தால் போதுமானது. மற்ற இரு பங்கு மக்கள் 10 முதல் 15 கட்சிகளுக்குத்தான் பிரித்து வாக்களித்திருப்பார்கள். ஆதலால், மோடிக்கு எதிராகவோ, பாஜகவுக்கு எதிராகவோ எந்த ஸ்திரமான கூட்டணியும் அணியும் உருவாகாது. 10 முதல் 15 கட்சிகளாகப் பிரிந்து வாக்கு பிரிவதற்குக் காரணமே காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிதான்.