அதிமுகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவுச் செயலாளரும் முன்னாள் எம்.பி.,யுமான அன்வர்ராஜாவை அதிமுகவில் இருந்து நீக்கி கட்சியில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளார். 


மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அன்வர்ராஜா பங்கேற்ற போது, அவர் அதற்கு முன் இபிஎஸ்.,யை ஒருமையில் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பிரச்சனை எழுப்பியதும், அன்வர்ராஜாவை கூட்டத்திலிருந்து வெளியேற்ற கூறியதும் அக்கூட்டத்தில் விஸ்வரூபம் எடுத்தது. அதன் பின் அந்த விவகாரத்தை அங்கிருந்த நிர்வாகிகள் பேசி சமரசம் செய்த நிலையில், அதன் பின் பல்வேறு தொலைக்காட்சிகளில் நேர்காணல் அளித்த அன்வர்ராஜா, கூட்டத்தில் நடந்தபல உண்மைகளை கூறியிருந்தார்.


அது மட்டுமல்லாமல், சசிகலா குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார். அத்தோடு பாஜக கூட்டணியை விரும்பவில்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான் சற்று முன் அவரை கட்சியின் அடிப்படை பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. 






அன்வர்ராஜாவின் தொலைக்காட்சி நேர்காணலில், சசிகலா குறித்த கேள்விக்கு, அவர் எப்போதும் எங்களுக்கு சின்னம்மா தான் என்கிற கருத்தை அன்வர்ராஜா கூறியிருந்தார். இது அதிமுக தலைமைக்கு பெரும் நெருக்கடியை தந்தது. இது குறித்து மூத்த நிர்வாகிகள் பலரும் தங்கள் அதிருப்தியை நேரடியாகவே அதிமுக தலைமைக்கு தெரிவித்துள்ளனர். 


போதாக்குறைக்கு பாஜக கூட்டணியை தான் விரும்பவில்லை என்றும், மேலும் பலருக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும் போட்டு உடைத்தார் அன்வர்ராஜா. இதுவும் அதிமுக தலைமையின் கோபத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தற்போதும் சரி, இதற்கு முன்பும் சரி, பாஜக கூட்டணியை விமர்சித்த பலர் மீது இது போன்ற நடவடிக்கையை அதிமுக தலைமை எடுத்துள்ளது. அந்த வகையில் இந்த இரு காரணங்களுக்காக தான் அன்வர்ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.


இதற்கிடையில் கட்சி தலைமை தானாக தன்னை நீக்கட்டும் என்கிற ரீதியில் தான் அன்வர்ராஜா செயல்பட்டார் என்கிற கருத்தும் முன் வைக்கப்படுகிறது. கட்சி கட்டுப்பாட்டை மீறி அவர் சில கருத்துக்களை தெரிவிக்க காரணமும் அது தானாம். அதுமட்டுமின்றி, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பன், அன்வர்ராஜாவிற்கு தூது விட்டதாகவும் ஒரு பேச்சு சமீபத்தில் அடிபட்டது. ஒருவேளை அது நிறைவேறும் நேரம் நெருங்கியதை அதிமுக தலைமை அறிந்ததால், முன்கூட்டியே இந்த நீக்க நடவடிக்கை நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


அதிமுகவில், எம்.ஜி.ஆர்., காலம் தொட்டே கட்சியில் பணியாற்றி வரும் அன்வர்ராஜா, இதற்கு முன் ஜெயலலிதா காலத்திலும் பல்வேறு கட்சி நெருக்கடிகளுக்கு ஆளானவர். அதன் பின் மீண்டும்  ஜெயலலிதா அன்பை பெற்று மீண்டும் கட்சியில் கோலோச்சியவர். ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் நெருக்கமாக இருந்தார். இதற்கு முன் ஒரு முறை பாஜக கூட்டணி குறித்து விமர்சித்து அதனால் சில பிரச்சனைகளை அவர் சந்தித்தார். அதன் பின் வருத்தம் தெரிவித்து உடன்பட்டார். இந்நிலையில் தான், இபிஎஸ்.,யை விமர்சிக்கும் பிரச்சனையில் சிக்கி அதன் தொடர்ச்சியாக நடந்த அடுத்தடுத்த நிகழ்வுகளால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.