மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் மாவட்ட நீதிமன்றம் நடிகை அமிஷா படேல் மீது செக் மோசடி வழக்கில் பிணை வழங்கக்கூடிய வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் 30 அன்று, போபாலின் மாவட்டம் மற்றும் அமர்வுகளின் நீதிமன்றம் நடிகை அமிஷா மீது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. நடிகை அமிஷா படேல் மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்களின் போது, காங்கிரஸ் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 32.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான செக் மோசடி வழக்கில் அமிஷா படேல் மீது தற்போது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு யூ.டி.எஃப் டெலிஃப்லிம்ஸ் நிறுவனம் சார்பாக அமிஷா படேல் மீது தொடுக்கப்பட்டுள்ளது. வாரண்ட் பிறப்பித்துள்ளதோடு, வரும் டிசம்பர் 4 அன்று, நடிகை அமிஷா படேல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 


யூ.டி.எஃப் டெலிஃப்லிம்ஸ் நிறுவனம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ரவி பந்த் நீதிமன்றத்தில், நடிகை அமிஷா படேல் தனது நிறுவனமான அமிஷா படேல் ப்ரொடக்‌ஷன் மூலமாக யூ.டி.எஃப் டெலிஃப்லிம்ஸ் நிறுவனத்திடம் புதிய படம் தயாரிப்பதாகக் கூறி, 32.25 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகவும், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமிஷா படேல் 32.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான செக் வழங்கியதாகவும், அது வங்கியில் பவுன்ஸ் ஆனதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 



அமிஷா படேல்


 


செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ரவி பந்த், நடிகை அமிஷா படேல் மீது நீதிமன்றம் பிணை பெறக்கூடிய வாரண்ட் பிறப்பித்திருப்பதாகவும், அமிஷா வரும் டிசம்பர் 4 அன்று மாவட்ட நீதிமன்றத்தின் ஆஜராகவில்லை என்றால், அவரைக் கைது செய்வதற்கான வாரண்ட் பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார். 


மேலும், இந்தூரில் நடிகை அமிஷா மீது சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான செக் மோசடி செய்தார் என ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சினிமா தயாரிப்பு என்ற பெயரில் இந்தூரைச் சேர்ந்த நிஷா சிப்பா என்பவரிடம் நடிகை அமிஷா படேல் 10 லட்சம் ரூபாய் பெற்றதாகக் கூறப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு, ஏப்ரல் 24 அன்று, நிஷாவுக்கு அமிஷா செக் வழங்கியதாகவும், வங்கியில் அந்த செக் பவுன்ஸ் ஆனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 



பிரசாரத்தில் அமிஷா படேல்


 


கடந்த 2019ஆம் ஆண்டு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நீதிமன்றம் செக் மோசடி மற்றும் மோசடி வழக்கில் நடிகை அமிஷா படேல் மீது கைது வாரண்ட் பிறப்பித்தது. சினிமா தயாரிப்பாளர் அஜய் சிங், நடிகை அமிஷா படேலும், அவரது தொழில் பங்குதாரரும் தன்னிடம் இருந்து புதிய திரைப்படத்திற்காக 2.5 கோடி ரூபாய் பணம் பெற்றதாகவும், படம் 2018ஆம் ஆண்டு வெளியாகும் எனக் கூறி, படத்தை வெளியிடவில்லை எனக் குற்றம் சாட்டியுனார். அதன்பிறகு, நடிகை அமிஷா அவருக்கு அளித்த 3 கோடி ரூபாய்க்கான செக் மீண்டும் பவுன்ஸ் ஆனதாக அஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.