கடந்த நவம்பர் 29 அன்று, நாடாளுமன்றத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் 12 எதிர்க்கட்சி எம்.பிகள் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளனர். மாநிலங்களவை தலைவர் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் மன்னிப்பு கோர வேண்டிய போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். துணைக் குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடுவை எதிர்க்கட்சிகளின் சார்பில் மல்லிகார்ஜூன் கார்கேவுடன் 8 உறுப்பினர்கள் இந்த விவகாரம் தொடர்பாக சந்தித்து, இடைநீக்கத்தைத் தள்ளுபடி செய்யக் கோரியுள்ளனர். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, வெங்கய்யா நாயுடு இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் மன்னிப்பு கோர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இடைநீக்கம் செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் பினாய் விஸ்வம் மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை எனக் கூறியுள்ளார். `எதற்கு மன்னிப்பு? மன்னிப்பு கேட்பதற்கு நாங்கள் சாவர்க்கர் அல்ல. எங்கள் கலாச்சாரத்தில் மன்னிப்புக் கடிதம் எழுதும் வழக்கம் இல்லை’ என பினாய் விஸ்வம் கூறியுள்ளார். 



பினாய் விஸ்வம்


 


`நாடாளுமன்ற வழிமுறைகளையும், எதிர்க்கட்சிகளையும் கீழ்த்தரமாக நடத்தும் அரசு இது. எதிர்க்கட்சிகளே நாட்டுக்குத் தேவையில்லை எனக் கருதும் அரசு இது. இவர்களின் முன் நாங்கள் கீழ்ப்படிய மாட்டோம்’ எனக் கூறியுள்ள பினாய் விஸ்வம் இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விவகாரம் குறித்து இந்தியில், `எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? மக்களின் பிரச்னையை நாடாளுமன்றத்தில் பேசியதற்காகவா? முடியாது!’ எனப் பதிவிட்டுள்ளார். இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 12 உறுப்பினர்களுள் 6 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், இருவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், மற்றும் இருவர் சிவ சேனா கட்சியைச் சேர்ந்தவர்கள். இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு உறுப்பினரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 


மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி, இடைநீக்கம் நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிரானது என வாதிட்டார். `முந்தைய கூட்டத்தொடரில் நடந்துகொண்ட விதத்திற்காக இந்த கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். இது நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிரானது. இதனால் மன்னிப்பு கேட்கும் தேவை இங்கு இல்லை’ என அவர் கூறியுள்ளார். 



இளமரம் கரீம்


 


இன்று நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்திய மாநிலங்களவை உறுப்பினர்களுள் ஒருவரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜான் ப்ரிட்டாஸ், முதலில் அமளியில் ஈடுபட்டவர்கள் என்று வெளியான 33 பேர் கொண்ட பட்டியலில் இளமரம் கரீம் என்ற மாநிலங்களவை உறுப்பினரின் பெயர் இடம்பெறவில்லை என்றும், அவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் நவம்பர் 30 முதல் நாடாளுமன்றத்திற்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், இன்று வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையின் முன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டதோடு, மத்திய அரசை `சர்வாதிகாரி’ என்று விமர்சித்து முழக்கங்களை எழுப்பினர்.