காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து ட்வீட் செய்ததற்காக பாரதிய ஜனதா கட்சியின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா மீது பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் புதன்கிழமை எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
வழக்குப் பதிவு
முன்னாள் எம்எல்ஏவும், கர்நாடக காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் பாபு, மாளவியா மீது வழக்குப் பதிவு செய்த நிலையில், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 153 ஏ, 120பி, 505(2), 34 ஆகிய பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அமித் மாளவியா சமீபத்தில் ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணம் குறித்த வீடியோவைப் பகிர்ந்து அதோடு அவர் ஒரு ‘நயவஞ்சக விளையாட்டை’ விளையாடுகிறார் என்று குற்றம் சாட்டி இருந்தது குறிபபிடத்தக்கது.
கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே
இதற்கிடையில், கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், சட்டக் கருத்தைப் பெற்ற பின்னரே வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றார். அவர் கூறுகையில், “சட்டத்தை எதிர்கொள்ளும் நிலை வரும்போது எல்லாம், பாஜக எப்போதுமே அழுகிறது. நாட்டின் சட்டத்தை பின்பற்றுவதில் அவர்களுக்கு என்ன சிக்கல் உள்ளது என்று தெரியவில்லை. எஃப்.ஐ.ஆரின் எந்தப் பகுதி தவறான நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை கட்சியினரிடம் கேட்க விரும்புகிறேன்," என்றார்.
சட்ட ஆலோசனைக்குப் பிறகு செய்துள்ளோம்
மேலும் பேசிய பிரியங்க் கார்கே, "சட்ட ஆலோசனைக்குப் பிறகு தான் நாங்கள் அதைச் செய்துள்ளோம், அது தவறான எண்ணம் என்று அவர்கள் நினைத்தால், எங்களை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளுங்கள்," என்று அதிரடியாக கூறினார். பிரியங்க் கார்கேவுக்குப் பதிலளித்த பெங்களூரு தெற்கு எம்பி தேஜஸ்வி சூர்யா, இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், நீதிக்காக நீதிமன்றத்தில் இதை எதிர்கொள்வோம் என்றும் கூறினார்.
அரசியல் உள்நோக்கம் உள்ளது
தேஜஸ்வி சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "அமித் மாளவியாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்ஐஆர் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பது தெளிவாக தெரிகிறது. ராகுல் காந்திக்கு எதிராக அவர் கருத்து கூறியதாக ஐபிசி 153A மற்றும் 505(2) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கூறிய இரண்டு பிரிவுகளும் குழுக்களிடையே பகைமையை வளர்ப்பதற்காக கையாளப்படுகின்றன. அப்படியென்றால், ராகுல் காந்தி என்றால் என்ன? ஒரு தனிநபர் அல்லது ஒரு குழு அல்லது ஒரு வகுப்பா? இதை நீதிமன்றத்தில் சவால் செய்து நீதியை உறுதி செய்வோம்," என்றார்.