கர்நாடகாவில் கடந்த மாதம் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தாலும் முதலமைச்சரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி நீடித்து வந்தது. 
முதலமைச்சர் பதவியை பெறுவதில் சித்தராமையா, டி.கே. சிவக்குமார் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.


சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே அதிகார போட்டியா?


இறுதியாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் தலையீட்டின் பேரில் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சித்தராமையா முதலமைச்சராக இருப்பார் என்றும் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே. சிவக்குமார் முதலமைச்சராக இருப்பார் என்றும் ஃபார்முலா வகுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


அதன்படி, முதலமைச்சராக சித்தராமையாவும் துணை முதலமைச்சராக டி.கே. சிவக்குமாரும் பதவியேற்றனர். பிரச்னைக்கு தீர்வு கண்ட போதிலும், இருவருக்கிடையே அதிகார போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், சித்தராமையா குறித்து டி.கே. சிவக்குமார் தெரிவித்த கருத்து அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. முதலமைச்சர் சித்தராமையா, அவரது முந்தைய ஆட்சிக் காலத்தில் தொடர பயந்த ஒரு திட்டத்தை நான் முதலமைச்சராக இருந்திருந்தால் முன்னெடுத்திருப்பேன் என டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.


"சித்தராமையாவுக்கு பயம்"


விஜயநகரப் பேரரசு ஆட்சி காலத்தில் பெங்களூரு நகரை உருவாக்கியவர் மன்னர் கெம்பேகவுடா. இவரது பிறந்த நாள் விழாவில் பேசிய 
டி.கே. சிவக்குமார், "சுரங்கப்பாதைகள் மற்றும் மேம்பாலங்களை அமைக்க பல கோரிக்கைகளை பெற்றேன். 2017 ஆம் ஆண்டில், பெங்களூருவில் எஃகு மேம்பாலத்திற்கு எதிரான போராட்டங்களை கண்டு முதலமைச்சர் சித்தராமையாவும், பெங்களூரு நகர மேம்பாட்டு அமைச்சராக இருந்த கே.ஜே.ஜார்ஜும் பயந்தனர். 


நானாக இருந்திருந்தால் போராட்டக்காரர்களின் சத்தத்திற்கு அடிபணிந்திருக்க மாட்டேன். திட்டத்தை முன்னெடுத்துச் சென்றிருப்பேன்" என்றார். துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரின் கருத்து குறித்து அமைச்சர் பிரியங் கார்கே பேசுகையில், "சித்தராமையா பயந்துவிட்டார் என்று சொல்ல முடியாது. 


மக்கள் கருத்தை உணர்ந்து  முதலமைச்சர் செயல்படுகிறார். சில நேரங்களில், தவறான தகவல்கள் பரவி, நல்ல முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படும். அதைதான், துணை முதலமைச்சர் சொல்ல வருகிறார் என நினைக்கிறேன்" என்றார். 


சித்தராமையாவும் டி.கே. சிவக்குமாரும் ஒற்றுமையுடன் செயல்படுவதாக காங்கிரஸ் தரப்பில் கூறினாலும், அது சிறிது காலத்திற்குதான் நீடிக்கும் என்றும் அதன் பின்னர், அரசில் பிளவு ஏற்பட்டு ஆட்சி கவிழும் என்றும் பாஜக கூறி வருகிறது.  இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர். அசோகா கூறுகையில், "முதலமைச்சர் சித்தராமையா அமைதியாக இருந்தாலும் துணை முதலமைச்சர் சிவக்குமார் அதிரடியாக பேசி விடுகிறார். ஒவ்வொரு கூட்டத்திலும் சிவக்குமார் முதலமைச்சருக்கு முன்பாக பேசுகிறார்" என்றார்.