யூடியூப் பிரபலம் சவுக்கு சங்கரின் குற்றச்சாட்டுகளுக்கு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார்.


பட்ஜெட் தாக்கல்:


இரண்டு தினங்களுக்கு முன்பாக 2023-24ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து இருந்தார். அதில், தகுதியான குடும்பதலைவிகளுக்கு மட்டும், மாதம் ரூ.1000 எனும் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு ஒரு தரப்பு ஆதரவும் மற்றொரு தரப்பு  எதிர்ப்பையும் தெரிவித்தது.


சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு:


அந்த வகையில், தமிழக அரசின் பட்ஜெட்டை விமர்சித்து வெளியான வீடியோ, வாய்ஸ் ஆஃப் சவுக்கு சங்கர் எனும் பக்கத்தில் பகிரப்பட்டது. இதையடுத்து அந்த ட்விட்டர் பக்கத்தின் அட்மின்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சவுக்கு சங்கர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், தமிழக பட்ஜெட்டை விமர்சித்து வெளியிட்ட ஒரு வீடியோ காரணமாக வாய்ஸ் ஆஃப் சவுக்கு சங்கர் ட்விட்டர் பக்கத்தின் அட்மின்களில் ஒருவரான பிரதீப் என்பவர் நள்ளிரவில் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.






சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு:


அதோடு, ”முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழக காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்த, வாய்ஸ் ஆஃப் சவுக்கு சங்கரின் அட்மின்களில் ஒருவரை கைது செய்ய வைத்தது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தான். அவரது மந்தமான பட்ஜெட்டை யாரும் விமர்சிக்கக் கூடாது என அவர் நினைக்கிறார். இந்த அரசு அவமானகரமானது” எனவும் சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார்.  


நிதியமைச்சர் பதில்:


இந்நிலையில் சவுக்கு சங்கருக்கு பதிலளித்துள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “இந்த கற்பனைவாதியின் சித்தப்பிரமையை நான் புறக்கணித்துவிட்டேன், ஆனால் தற்போது அவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் 100% பைத்தியக்காரத்தனமானது என்பதால் அதற்கு நான் எதிர்வினையாற்றுகிறேன். இப்படி ஒரு கணக்கு இருப்பதே எனக்குத் தெரியாது. அதனால் வீடியோவை பார்க்கவும் இல்லை. புகார் அளிக்கவும் இல்லை.  ஊழல் தடுப்பு இயக்குநரகத்தில் இருந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஒருவரின் மாநில அரசின் பட்ஜெட் மீதான விமர்சனம் என்னை பாதிக்குமேயானால், அன்றைய நாளில் நான் பொதுவாழ்வில் இருந்து விலகி விடுவேன்” என குறிப்பிடுள்ளார்.