திருச்சி மாநகராட்சியில் 59 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து 5 கோட்ட தலைவர் பதவியை கைப்பற்ற திமுகவினர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளுக்கான தேர்தலில் திமுக தனித்து 49 வார்டுகளிலும், காங்கிரஸ் 5 வார்டுகளிலும், மதிமுக 2 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,விடுதலை சிறுத்தை கட்சி, ஆகியவை தலா 1 வார்டுகளிலும் என்று 10 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. திமுக கூட்டணி மொத்தம் 59 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளதால் மேயர், துணை மேயர் பதவிகள் திமுகவுக்கு என்பது உறுதியாகியுள்ளது.
இதேபோன்று திருச்சி மாநகராட்சியில் ஏற்கனவே இருந்த 4 கோட்டங்களுக்கும் பதிலாக புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வரையறையின் படி 5 கோட்டங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளது. அந்த 5 கோட்டங்களின் தலைவர் பதவியைப் பிடிக்கவும் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக நிர்வாகியிடம் பேசுகையில், திருச்சி மாநகராட்சியில் எதிர்பார்த்ததை போலவே அமைச்சர்கள் நேரு ,அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
மேலும் திருச்சி மாநகராட்சியில் மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை கட்சி தலைமை அறிவிக்கும். தொடர்ந்து கோட்டத் தலைவர்கள் பதவிக்கான வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர் இப்பணி நடந்து வருகிறது. இந்த முறை கோட்டங்கள் 5 ஆக பிரிக்கப்பட்டு உள்ளதால் அந்த இடங்களில் வெற்றி பெற்ற மூத்த, முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியினரும் இப்பதவியை பெற தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்.இப்போதைய நிலவரப்படி 1-7, 12-15, 19, 21 ஆகிய வார்டுகள் அடங்கிய முதல் கோட்டத் தலைவர் பதவியை பிடிக்க ஸ்ரீரங்கம் பகுதி திமுக செயலாளர் மனைவி ஆண்டாள், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஜவஹர் ஆகியோரும், 17,18, 20, 30-34, 47-50, 59, ஆகிய வார்டுகள் கொண்ட இரண்டாவது கோட்டத் தலைவர் பதவியைப்பிடிக்க அதிமுக முன்னாள் துணை மேயர் சீனிவாசனை தோற்கடித்த ராஜசேகரன், முன்னாள் கவுன்சிலர் லீலா வேலு, ஆகியோரும், துணை மேயர் வாய்ப்பு கிடைக்காவிட்டால் காங்கிரஸ் கட்சி முன்னாள் மேயர் சுஜாதாவும் ரேசில் உள்ளனர்.
இதனை தொடர்ந்து 16வது வார்டு மற்றும் 35-46 வார்டுகள் கொண்ட 3 வது கோட்டத் தலைவர் பதவிக்கு, துணை மேயர் பதவியை எதிர்பார்த்து வரும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தீவிர ஆதரவாளரான மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் தீவிரமாக உள்ளனர். மேலும் 51-54, 56-58, 60-65 ஆகிய வார்டுகள் கொண்ட 4 வது கோட்டத் தலைவர் பதவிக்கு மாவட்ட துணைச் செயலாளர் முத்துச்செல்வம், முன்னாள் கவுன்சிலர் செல்வம் மனைவி கவிதா, பகுதி செயலாளர் காஜாமலை விஜய் , ஆகியோர் தீவிர போட்டி நிலவுகிறது.
இதனை தொடர்ந்து 8-11, 22-29, 55 ஆகிய வார்டுகள் அடங்கிய 5 வது கோட்டத் தலைவர் பதவிக்கு விஜயா ஜெயராஜ், முன்னாள் கோட்டத் தலைவர் விஜயலட்சுமி, காங்கிரஸ் கட்சி ஷோபியா உள்ளிட்டோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் பலர் துணை மேயர் கனவிலும் இருக்கின்றனர். அது நிறைவேறாவிட்டால் அடுத்த கோட்டத் தலைவர் பதவியானது பிடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளில் உள்ளனர். அதே சமயம் சிலர் தங்களுக்கு ஆசை இருந்தாலும் அமைச்சர் எந்த முடிவு எடுத்தாலும் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
சிலர் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக நீங்க சொல்லுங்க என்று மறைமுகமாக ஆதரவு தேடி வருகின்றனர். மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் அமைச்சர் நேருவின் சாய்ஸ் என்பதால், 5 கோட்டத் தலைவர் பதிவிகளில் 2 அமைச்சர் அன்பில் மகேஷ் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது. கோட்டத் தலைவர் பதவி கிடைக்காதவர்களுக்கு அடுத்து அடுத்து நடைபெற உள்ள பல்வேறு குழு தலைவர் பதவியும் கிடைக்கும் என்றனர். மார்ச் 4 ஆம் தேதி மேயர், துணை மேயர் காண மறைமுக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அடுத்த கட்டமாக கோட்டத் தலைவர்கள் பதவிக்கான விறுவிறு ரேசும் திமுக வட்டாரத்தில் அரங்கேறி வருகிறது.