நடைபெற்ற முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில்  , திருப்பூர் மாநகராட்சி , 6 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளை கைப்பற்றியுள்ளது திமுக. இந்நிலையில் மாநகராட்சியில் மேயராக திமுக வில் இருந்து யார் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.



திருப்பூர் மாநகராட்சி


கடந்த 2008 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது திருப்பூர். அதன்பிறகு நடந்த 2011 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று விசாலாட்சி என்பவர் மேயராக பதவியேற்றார். இந்நிலையில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாநகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. மாநகராட்சியில்  உள்ள 60 வார்டுகளில் திமுக கூட்டணி 37 வார்டுகளையும் , அதிமுக கூட்டணி 19 வார்டுகளையும் , பா.ஜ.க 2  , சுயேட்சை 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். திருப்பூர் மாநகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றி இருந்தாலும் , தனிப்பெரும்பான்மை இல்லாத நிலை திமுக விற்கு உள்ளது. திமுக நேரடியாக 23 இடங்களிலும் , அதன் கூட்டணி கட்சியாக இருக்கும் சி.பி.ஐ 6 , சி.பி.எம் 1 , மதிமுக 3 , காங்கிரஸ் 2 , IUML 1 , மனித நேய மக்கள் கட்சி 1 என அனைத்தும் சேர்ந்து 37 வார்டுகளை கைப்பற்றி மாநகராட்சி மேயராக பதவியேற்க தயாராகி வருகின்றனர் திமுக வினர். மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 58 இடங்களில் அதிமுக போட்டியிட்டாலும் 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.


தேர்தலுக்கு பிறகு மறைமுக தேர்தல் மூலமாக மேயர் தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற நிலையிலும் , அதிமுக வை பொறுத்தவரை மேயர் வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் என்பவரை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தது அதிமுக.  ஆனால் மேயர் வேட்பாளராக முன்னிறுத்தபட்ட குணசேகரன் என்பவரே தோற்றுவிட்டார். மேயர் வேட்பாளராக தேர்வு செய்யக்கூடும் என திமுக வில் சொல்லப்பட்ட 2 நபர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த இரண்டு நபர்களில் யார் மேயர் என்பதே இப்போதைக்கு திருப்பூர் திமுக வினரின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. திருப்பூர் மாநகராட்சியை பொறுத்தவரை திருப்பூர் தெற்கு தொகுதிக்கு 21 வார்டுகளும்  , திருப்பூர் வடக்கு தொகுதிக்கு 29 வார்டுகளும் , பல்லடம் தொகுதிக்கு 10 வார்டுகளும் இருக்கின்றன. 



மேயர் ரேசில் இருக்கும் தினேஷ்குமார்


திருப்பூர் வடக்கு மாநகர செயலாளராக இருக்கும் தினேஷ்குமார் மற்றும் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கும் பத்மநாபன் ஆகிய இருவரில் ஒருவர் தான் மேயராக வாய்ப்பு என திமுக வினர் மத்தியில் கூறப்படுகிறது. திருப்பூர் மாநகர் பகுதிக்குள் 50 வார்டுகள் இருப்பதால் திருப்பூர் மாநகர் பகுதியை பூர்வீகமாக கொண்ட தினேஷ்குமார் தான் மேயர் ஆவார் என்றும் , பத்மநாபனின் சொந்த ஊர் மூலனூர் அருகில் என்பதால் திருப்பூர் மாநகருக்கான மேயராக வருவதில் திமுக வினர் அவ்வளவாக ரசிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. பத்மநாபனை பொறுத்தவரை நீண்ட ஆண்டுகளாக மாவட்ட செயலாளராக இருக்கிறார். அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தீவிர ஆதரவளராக அறியப்படுபவர். அவர் மூலமாக மேயராக முயற்சி மேற்கொண்டு வருகிறார்.



பத்மநாபன்


தினேஷை பொறுத்தவரை மாற்றுக்கட்சியில் இருந்து திமுக விற்கு வந்தவர் என்பதை தாண்டி,  மிக துடிப்புடன் செயல்பட கூடியவர், கட்சியில் அனைத்து நபர்களையும் அரவணைத்து செயல்படுபவர் என்றும் உள்ளூர் உடன்பிறப்புகளால் பாராட்டப்படுவதால்,  தான் மேற்கொண்ட வேலைகள் மற்றும் தேர்தல் வெற்றியை சுட்டிக்காட்டி தலைமையிடம் மேயராக வாய்ப்பு கேட்டு வருகிறார். அதே போல் , நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பிரம்மாண்ட வெற்றியை திமுக பெற்றிருந்தாலும் கோவை திருப்பூர் மாவட்டங்களில் அதிகரித்து காணப்படும் உட்கட்சி பூசல்களும் தலைமைக்கு தலைவலியாக உள்ளது. தினேஷ்குமார் மேயராக வரும் பட்சத்தில் திருப்பூர் மாநகர் திமுக வை அடிப்படையில் இருந்து பலப்படுத்த பயனுள்ளதாக இருக்கும் என்றும் திமுக வினர் நம்புகின்றனர். வார்டு கவுன்சிலர்களின் பெரும்பான்மை ஆதரவும் தினேஷ்குமார் க்கு இருப்பதாகவே கூறப்படும் நிலையில் , இன்னும் தலைமையிடம் இருந்து உறுதியான தகவல் எதும் வரவில்லை என்கின்றனர் திமுகவினர்.


அதேபோல், வயது, அனுபத்தில் மூத்தவராக இருக்கும் பத்மநாபனும் இந்த முறை நிச்சயம் மேயராகிவிடவேண்டும் என்று தொடர் முயற்சியில் இருக்கிறார். துடிப்பு, செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திமுக தலைமை தினேஷை மேயராக்க போகிறதா ? அல்லது வயது, அனுபவத்தில் மூத்தவரான அமைச்சர் சாமிநாதனின் தீவிர ஆதரவாளரான பத்மநாபனை மேயராக்க போகிறதா என்பது இன்னும் ஒரு சில தினங்களில் தெரிந்துவிடும்