Nitin Gadkari Faints: மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயங்கி விழுந்த மத்திய அமைச்சர்:
நாட்டை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மகாராஷ்டிராவை பொறுத்தவரையில், 5 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி, 5 தொகுதிகளுக்கு தேர்தல் தேர்தல் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக நாளை மறுநாள் 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தில் நடந்தது என்ன?
இந்த நிலையில், பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி யவத்மாலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சி போட்டியிடுகிறது.
பாஜக கூட்டணி வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டீலுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, நிதின் கட்கரி, திடீரென மயங்கி விழுந்தார். நல்வாய்ப்பாக அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிய இடைவெளிக்கு பிறகு, உடல் நலம் தேறிய நிதின் கட்கரி மேடையில் தனது உரையை தொடங்கினார்.
நிதின் கட்கரி மயங்கி விழும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசியது எக்ஸ் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதில், நிதின் கட்கரி மயங்கி விழுவதும் மேடையில் அமர்ந்திருந்த மற்ற பாஜக தலைவர்கள் அவரை தூக்கி சிகிச்சை அளிப்பதும் பதிவாகியுள்ளது.
தற்போது நலமாக இருப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நிதின் கட்கரி, "மகாராஷ்டிர மாநிலம் புசாத் நகரில் நடந்த பேரணியின் போது வெப்பம் காரணமாக அசௌகரியமாக உணர்ந்தேன். ஆனால், இப்போது நான் முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கிறேன். அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்ள வருட் கிளம்புகிறேன். உங்கள் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.