Supreme Court: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் அனைத்து வாக்குகளையும் விவிபேட் ஒப்புகை சீட்டு மூலம் சரிபார்க்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.


ஒப்புகை சீட்டு என்றால் என்ன?


கடந்த 20 ஆண்டுகளாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் தொடக்கத்தில் இருந்தே அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இதனால், விவிபேட் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு முறை கொண்டு வரப்பட்டது. 


யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை வாக்காளர் தெரிந்து கொள்ள விவிபேட் பயன்படுத்தப்பட்டது. வாக்களிக்கும் போது, ​​சீரியல் நம்பர், வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய சீட்டு அச்சிடப்பட்டு வாக்காளருக்கு வழங்கப்படும்.


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் அனைத்து வாக்குகளையும் விவிபேட் மூலம் சரிபார்ப்பதை கட்டாயமாக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.


உச்ச நீதிமன்றம் எழுப்பிய 5 முக்கிய கேள்விகள்:


இந்த வழக்கின் தீர்ப்பு ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து, இன்றைய விசாரணையின்போது, இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 5 முக்கிய கேள்விகளை எழுப்பினர்.


மைக்ரோகண்ட்ரோலர் கருவியானது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு பிரிவில் பொருத்தப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் பொருத்தப்பட்டுள்ளதா? என நீதிபதி சஞ்சீவ் கண்ணா கேள்வி எழுப்பினார்.


"இரண்டாவது கேள்வி என்னவென்றால் பொருத்தப்பட்டுள்ள மைக்ரோகண்ட்ரோலர் கருவியை ஒரு முறை மட்டும்தான் நிரல்படுத்த முடியுமா (one time programmable)? மூன்றாவது கேள்வி என்னவென்றால் தேர்தல் ஆணையத்திடம் எத்தனை சின்னங்களை ஏற்றும் அலகுகள் உள்ளன? நான்காவது கேள்வி என்னவென்றால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை 30 நாட்கள் மட்டுமே வைத்து கொள்ள முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் நம்பகத்தன்மை வாய்ந்ததா?


ஆனால், தேர்தல் தொடர்பாக வழக்கு தொடர்ந்தாலோ அல்லது மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற வாய்ப்புகள் இருந்தாலோ, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் கூடுதல் நாள்களுக்கு வைக்கப்படுகிறது.


இருப்பினும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 81இன்படி, 45 நாட்கள் வரை வைத்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. உங்கள் அதிகாரியிடம் இருந்து விளக்கம் பெற வேண்டும்.


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குப்பதிவு அலகு, கட்டுப்பாட்டு அலகு மற்றும் விவிபேட் ஆகிய மூன்று கூறுகள் உள்ளன. அவை ஒன்றாக சேகரிக்கப்பட்டு, சீல் வைக்கப்படுகிறதா?" என அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைக்கப்பட்டது. 


இதையடுத்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பொதுவாக, வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுவிட்டால், அதன் பிறகு விசாரணை எதுவும் நடைபெறாது. ஆனால், இன்றைய விசாரணையில் தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் 5 கேள்விகளை எழுப்பியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.