ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழகத்தில் விடுபட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுகிறது. அவ்வாறு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் திறந்த வெளிவாகனத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், “வலுவான உள்ளாட்சிகளே முழுமையான மாநில சுயாட்சியை உறுதிப்படுத்தும் என்பது மக்கள் நீதி மய்யத்தின் முக்கியக் கொள்கைகளுள் ஒன்று. இந்த அடிப்படையில் உள்ளாட்சிகளின் மேம்பாட்டுக்காக கருத்தியல் ரீதியிலும், களத்திலும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறது. அடிப்படையிலிருந்து மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என நாம் விரும்புகிறோம். நேர்மையானவர்களுக்கு வாக்களியுங்கள் மாறி, மாறி கழகங்களுக்கு வாக்களிப்பதில் இருந்து மீண்டு வாருங்கள்.
கழகங்களுக்கே மீண்டும் வாக்களித்தால் உங்களுக்கு மேலும் எஜமானர்கள்தான் கிடைப்பார்கள். மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுத்தால் உண்மையான மக்கள் சேவகர்கள் கிடைப்பார்கள். ஒரு ஊரில் மக்களுக்கு எதிராக ஒரு நிறுவனம் துவங்க அரசு முயற்சி எடுத்தால் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை தடுக்க முடியும். அந்த அளவிற்கு கிராமங்களுக்கு வலிமை உள்ளது.
கிராமங்களின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி. தான் வரும் வழியில் ஒரு இடத்தை பார்த்தேன். அந்த இடம் மனிதர்களை புதைக்கும் இடுகாடு, அந்த இடத்தில் குப்பைக் கொட்டி வைத்துள்ளனர். அந்த இடுகாட்டில் குப்பையுடன் சேர்ந்தும் மனித உடல்களும் இருக்கிறது. இச்சம்பவம் மக்கள் நம்பிக்கை உடைப்பதாக அமைந்துள்ளது. இடுகாட்டை கூட ஆட்சியாளர்கள் விட்டுவைக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார்.
முன்னதாக கமல் பிரச்சாரத்திற்காக சென்றபோது அப்பகுதி மக்கள் கமலிடம், இடுகாட்டில் குப்பை கொட்டி நாசப்படுத்தி வைத்திருப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X