தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் மாநாட்டை நடத்தி வரும் நிலையில், இந்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


இந்த மசோதா தாக்கல், மாநில உரிமைகளுக்கான முழக்கமா அல்லது ஆளுநருடனான அதிகார மோதல் அரசியலா?, மாநில அரசின் தலையீட்டால் என்ன நடக்கும்? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.


இதுபற்றி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி 'ஏபிபி நாடு'விடம் கூறும்போது, ''இது வரவேற்கத்தக்க முடிவு. ஏற்கெனவே பல்கலைக்கழகங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளன. கடந்த காலங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் முடிவை மாநில அரசுதான் எடுத்துள்ளது. எனினும் அப்போதெல்லாம் பரஸ்பரப் புரிதல் அடிப்படையில், தமிழக அரசு அளிக்கும் பரிந்துரைகளையே ஆளுநர் ஏற்று, துணை வேந்தரை அறிவித்தார். 


அந்த வகையில் மாநில அரசே மீண்டும் துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும். மத்திய அரசின் கைகளில் துணைவேந்தர் நியமனம் செல்லக்கூடாது. 



வசந்தி தேவி


மாநில அரசு முடிவு செய்தால் அரசியல் தலையீடுகள் இருக்கும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுமே?


சில பல்கலைக்கழகங்களில் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் எங்களின் பதவிக் காலத்தில் எந்த அரசியல் தலையீட்டையும் நாங்கள் அனுமதிக்கவில்லை. அந்தந்தத் துணை வேந்தர்களின் ஆளுமை, திறனைப் பொறுத்தே அவை அமையும். ஏன் ஆளுநரின் முடிவில் அரசியல் தலையீடு இருக்காதா? மொத்தத்தில் மத்திய அரசு மாநிலப் பல்கலைக்கழகங்களின் நியமனத்தில் தலையிடக் கூடாது'' என்று வசந்தி தேவி தெரிவித்தார்.


இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நேர்மையானவர்கள், திறமையானவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி. இதுகுறித்து 'ஏபிபி நாடு'விடம் அவர் கூறும்போது, ''இது தேவையற்ற, அபத்தமான மசோதா. தமிழ்நாட்டுக்கே துரதிர்ஷ்டவசமானது. ஆளுநரை ஆளும் மாநில அரசுக்குப் பிடிக்காது என்பதால், இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. 


அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்குமே வாய்ப்பு?


ஆளுநர் துணைவேந்தரை நியமிப்பதில் தன்னிச்சையாக முடிவெடுப்பதில்லை. ஆண்டாண்டு காலமாக தேடுதல் குழு மூலம் வடிகட்டித்தான் தேர்ந்தெடுக்கிறார். அது மாற்றப்பட்டு, மாநில அரசு முடிவெடுக்கும் சூழல் ஏற்படும்போது 100 சதவீதம் அரசியல் தலையீடு ஏற்படும்.


இதில் 2 விதமாகத் துணைவேந்தர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்குமே வாய்ப்பு கிடைக்கும். அல்லது பணம் படைத்தவர்களுக்குப் பதவி வழங்கப்படும். நல்லவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் திறமையானவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்காது. ஊழல் அதிகரிக்கும். 



 பாலகுருசாமி


2006-க்குப் பிறகு, 70 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து ஒருவர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஆனார். அப்போதெல்லாம் ஆளுநர்கள் தமிழக அரசுடன் இணைந்து லஞ்சம் வாங்கினர். கடந்த 10 ஆண்டுகளாகக் காசு வாங்கிக்கொண்டுதான் முதல்வர்கள், பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவைகுறித்து என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் வந்தபிறகே அரசியல் தலையீடு நின்றது.


மத்திய அரசின் தலையீடு வராதா?


நிச்சயம் இருக்காது. ஆளுநர் நியமிக்கும் தேடல் குழுவே துணைவேந்தர்களைப் பரிந்துரை செய்யும். கல்வியின் தரத்தை உயர்த்த மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.


ஆளுநர் ஒப்புதல் வழங்க வாய்ப்புள்ளதா?


தமிழ்நாட்டில் ஏற்கெனவே கல்வியின் தரம் மோசமாக உள்ளது. கல்வியில் நேரடியான அரசியல் தலையீட்டுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் இந்த மசோதா சட்டமானால், தரம் இன்னும் மோசமாகும். அதனால் இந்த மசோதாவுக்கு ஆளுநர் நிச்சயம் ஒப்புதல் அளிக்க மாட்டார்'' என்று பாலகுருசாமி தெரிவித்தார். 




ஆளுநர் ஒப்புதல் அளித்தாலும் அளிக்காவிட்டாலும், துணைவேந்தர்களை அரசே நேரடியாக நியமிக்க வேண்டும் என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. அவர் மேலும் கூறும்போது, ''அரசமைப்புச் சட்டம் அட்டவணை 7, பட்டியல் 2 (32)-ன்படி பல்கலைக்கழகங்களை உருவாக்குதல், ஒழுங்குபடுத்தல், கலைத்தல் ஆகியவை மாநில அரசின் அதிகாரமே. பல்கலைக்கழகங்களை உருவாக்கும் மாநில அரசுதானே அதை நிர்வகிக்கவும் வேண்டும்? பிரிட்டிஷ் கால வழக்கமான ஆளுநர் பல்கலை. வேந்தராக இருக்கும் நடைமுறையை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மாற்றுவதுதான் சரி. 


அரசியல் செய்வது ஆளுநர்தான். அவருக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்படும்போது, சட்டப்பேரவையில் இயற்றிய மசோதா அனுப்பி வைக்கப்படும்போது அதை நிறைவேற்றுவதோ, நிராகரிப்பதோ அவரின் கடமை. ஆனால் இரண்டையுமே அவர் செய்யவில்லை. 


ஆளுநர் தன் பணியைச் செய்கிறாரா?


கொடுக்கப்பட்ட பணியைச் செய்யத்தான் 300 பேர் அவருக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். 100 ஏக்கருக்கு மேல் இடம் கொடுக்கப்பட்டு, மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கான வேலையைச் செய்யாமல், தனியார் ஐ.டி. நிறுவனத்தைப் பல்கலைக்கழகத் துணை வேந்தருக்கு நியமிக்கும் பணியைச் செய்து வருகிறார். இன்று நடைபெற்று வரும் துணைவேந்தர்கள் மாநாட்டில், ஜோஹோ தலைமைச் செயல் அதிகாரிக்கு எதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது?


இப்போதைய யூஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் ஜேஎன்யூவில் துணை வேந்தராக இருந்தபோது, அவரை 3 பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் தேடல் குழுவின் தலைவராக நியமித்தது ஏன்? ஆளுநர் இதில் உள்நோக்கத்துடன் செயல்படவில்லையா? அவ்வாறு ஆளுநர் செயல்படும்போது, அந்த அரசியலில் இருந்து பல்கலைக்கழகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ளது. 



பிரின்ஸ் கஜேந்திரபாபு


துணைவேந்தர்களை அரசே நியமிக்க வேண்டும்


ஆளுநர் இந்த சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளித்தாலும் அளிக்காவிட்டாலும், அரசே நேரடியாக துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும். அதில் விருப்பமில்லாதவர்கள் யாரேனும் இருந்தால், நீதிமன்றத்துக்குச் செல்லட்டும். 


இரண்டாவது முயற்சியாக அனைத்துக் கட்சிகளும் தெருவில் இறங்கிப் போராட வேண்டும். இல்லையெனில், மக்களாட்சி சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லும் நிலை ஏற்படும்'' என்று பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.


மாநில பல்கலைக்கழகங்களை உருவாக்கி, நிர்வகிக்கும் மாநில அரசே துணை வேந்தர்களை நியமிக்கும் பொறுப்பை மேற்கொள்வதுதான் சரியானது. அதேநேரத்தில், குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல், அரசியல் தலையீடு இல்லாமல் இருப்பதைக் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலான கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.