அதிமுக சட்டமன்ற குழு தலைவராக, பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்து முடிவெடுக்க கடந்த வெள்ளிக்கிழமை கூடியது ஒபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம், மாலை 4.30 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை சென்ற கூட்டத்தில் பல்வேறு சலசலப்புகளும், சஞ்சலங்களும், வாக்குவாதங்களும், வார்த்தை போர்களும் ஏற்பட்டன. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மட்டுமல்லாது, கட்சி அலுவலக வாசலில் இருந்த ஒபிஎஸ் –ஈபிஎஸ் ஆதரவாளர்களும் எதிர் எதிர் அணியாக பிரிந்து கோஷமிடத் தொடங்கினர். இதனையடுத்து, கூட்டமானது மீண்டும் திங்கள்கிழமையான இன்றுக்கு ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டு, ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஒபிஎஸ் - ஈபிஎஸ் சென்றபோது அங்கும் ஒரு தரப்பினர் ஒபிஎஸ் வாழ்க என்றும், அவர்களுக்கு போட்டியாக இன்னொரு தரப்பினர் எடப்பாடி பழனிசாமி வாழ்க எனவும் முழக்கமிட்டனர்.  நேரம் செல்ல, செல்ல முழக்கங்கள் எல்லாம்  மீண்டும் வாக்குவாதங்களாக மாறத்தொடங்கின. இதனால் அவசர அவசரமாக ஜெயலலிதா நினைவிடத்திலிருந்து ஒபிஎஸ்சும் ஈபிஎஸ்சும் கிளம்பிச் சென்றனர்.




அதேபோல், இன்று காலை 9.45 மணிக்கு மீண்டும் ஒபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் தொடங்கியயது அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம். இதில் ஒரத்தாடு எம்.எல்.ஏவும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ ஆகியோர் உடல்நலன் சரியில்லாததால் பங்கேற்கவில்லை. இதனால் ஒபிஎஸ் –ஈபிஎஸ் என மொத்தம் 62  எம்.எல்.ஏக்களுடன் கூட்டம் தொடங்கியது. தொடக்கம் முதலே சலசலப்புகள் எழுந்துள்ளன. சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக யாரை நியமிப்பது என பேச்சு எழுந்தபோது, மீண்டும் பஞ்சாயத்து துவங்கியது. பெருவாரியான தரப்பு எடப்பாடி பழனிசாமிதான் என்றும் மற்றொரு தரப்பு கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஒபிஎஸ்-சை தான் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் எனவும் குரல் எழுப்பியிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் மவுனம் கலைத்த ஒபிஎஸ் “எல்லா நேரத்திலும் என்னால் விட்டுக்கொடுத்துக்கொண்டே இருக்க முடியாது” என கோபப்பட்டுள்ளார். அதோடு, நான் எதிர்கட்சி தலைவர் ஆகவில்லை என்றால் பரவாயில்லை, அண்ணன் தனபாலை நாம் சேர்ந்து எதிர்கட்சி தலைவர் ஆக்குவோம் என புதிய அஸ்திரத்தை தொடுத்துள்ளார். ஆனால், அதற்கும் எடப்பாடியும் அவரது ஆதரவாளர்களும் அசைந்துகொடுக்கவில்லையாம். அப்போது ஒபிஎஸ்-க்கு ஆதரவாக பேசிய மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ “ எல்லாம் ஒன்றாக பயணிக்கலாம் என்றுதானே இணைந்தோம், ஏன் இன்னும் அண்ணனை முழுமையாக நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றீர்கள் என எடப்பாடி பழனிசாமியை பார்த்து கேட்டுள்ளார்” மனோஜ்பாண்டியன் இப்படி கேட்டதும் கொங்கு பகுதி எம்.எல்.ஏக்கள் எல்லாம் கோபம் கொப்பளிக்க எடப்பாடிக்கு ஆதரவாக எழுந்து நின்றுள்ளனர்.


பின்னர் அவர்களை அமைதிப்படுத்திவிட்டு பேசத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி ”சேலம் மாவட்டத்துல இருக்குற 11 தொகுதிகள்ல 10 தொகுதிகளையும்,  கோவை மாவட்டத்துல 10க்கு 10 தொகுதியும் ஜெயிச்சுக்கொடுத்திருக்கிறோம். அதேபோல, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள்ல பெருவாரியான இடங்கள அதிமுகவை ஜெயிக்க வச்சுருக்குறோம். ஆனா, தென் மாவட்டத்துல எத்தன தொகுதியை நீங்க ஜெயிக்க வச்சீங்க ? எத்தனை பேர எம்.எல்.ஏ ஆக்கியிருக்கீங்க சொல்லுங்க பாக்கலாம், இவ்வளவு பேர ஜெயிக்க வச்ச நாங்க எப்புடி எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க முடியும் ? “ என அவரும் தன் பங்கிற்கு எகிறியுள்ளார். திடீரென எழுந்து பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இரண்டு பேரும் இப்படி மாறி மாறி புகார் சொல்லிக்கொள்வதற்கு பதில், கோவை மாவட்டத்தில் 10க்கு 10 தொகுதிகளை ஜெயித்து கொடுத்த என்னை எதிர்க்கட்சி தலைவராக நியமியுங்களேன் என தன் பங்கிற்கு கொளுத்திப் போட்டுள்ளார்.  அப்போது அலெர்ட்டான எடப்பாடி பழனிசாமி, எனக்கு ஆதரவாக எத்தனை பேர் இங்க இருக்காங்கன்னு பாக்குறீங்களா என ஒபிஎஸ்-சை பார்த்து கேட்டுவிட்டு, தன் ஆதரவாளர்களை கைகளை உயர்த்த சொல்ல, பெரும்பாலோனோர் கைகளை உயர்த்தி ஆரவாரம் செய்திருக்கிறனர். இதனையெல்லாம் பார்த்து அப்செட்டான ஒபிஎஸ், மனமே இல்லாமலும் வேறு வழியும் தெரியாமலும் எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் தேர்வு செய்ய தலையை ஆட்டியிருக்கிறார். 




பின்னர், எடப்பாடியை எதிர்க்கட்சி தலைவராக ஏற்றுக்கொள்ளப்படும் படிவத்தில் கையெழுத்துபோட்ட கையோடு, ஒரு வாழ்த்தோ, சால்வையோ, பூங்கொத்தோ கூட கொடுக்காமல் கூட்டத்தில் இருந்து முதல் ஆளாக வேகவேகமாக வெளியேறிருக்கிறார் ஒபிஎஸ். ஒபிஎஸ்  வெளியேறிய வேகத்தை பார்த்த சில எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்கள் சிலர் எங்கே இவ்வளவு வேகமாக போறாரு மறுபடியும் தர்மயுத்தம் ஆரமிப்பாரோ என கிண்டல் அடித்துள்ளனர். ஆனால், இதையெல்லாம் ஓபிஎஸ் ஆதரவாளர் என அறியப்படுகிற அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அமைதியாக வேடிக்கை பார்த்துள்ளார். ஒபிஎஸ் வெளியேறிய பிறகு அனைத்து எம்.எல்.ஏக்களும், நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். இதை அதிமுக சார்பில் அனுப்பப்பட்ட புகைப்படங்களே உறுதி செய்கின்றன.




இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது இன்னும் அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்று பட்டவர்தனமாக தெரிகிறது என சொல்லும் பத்திரிகையாளர்கள், நாளடைவில் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற குரல்கள் எழுந்து, எடப்பாடி பழனிசாமியை கட்சியின் தலைவராகவோ அல்லது பொதுச்செயலாளராகவோ முன்னெடுக்கும் முயற்சிகள் நடக்கலாம் என யூகிக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க மன்னார்குடி, புதுக்கோட்டை போன்ற இடங்களில் மீண்டும் அதிமுகவிற்கு சசிகலா தலைமையேற்று வழிநடத்தவேண்டும் என்ற போஸ்டர்கள் முளைக்க ஆரம்பித்திருக்கின்றன.


கட்சியின் தோல்விக்கு பிறகு அதிமுக ஒற்றை தலைமையை நோக்கி செல்லுமானால், அது எடப்பாடி பழனிசாமி Vs சசிகலா இடையேயானதாகதான் இருக்கும் என்றும், நாளடைவில் ஒபிஎஸ்க்கு அளிக்கப்பட்டு வரும் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, அவர் ஓரங்கட்டப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கணிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆனால், இவ்வளவு ஆண்டுகால அரசியல் அனுபவத்தை பெற்றுள்ள ஒபிஎஸ் அப்படி எளிதில் ஓரங்கட்டப்பட்டு விடுவாரா அல்லது கட்சியில் மீண்டும் ஏதேனும் புரட்சியையோ அல்லது கிண்டலுக்கு சொல்வதுபோன்று இருந்தாலும், தர்மயுத்தத்தையோ தொடங்குவாரா என்பதற்கு காலம்தான் பதில்சொல்லவேண்டும்!