ஸ்மார்ட் மீட்டர் என்ற பெயரில் ரூ.6000 கோடி அளவிற்கு ஊழல் செய்ய தயாராகி வருகிறார்கள் என்றும், மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வது உறுதி எனவும் கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார். கரூரில் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் புலியூர் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.




அப்போது உரையாற்றிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் கைகோர்த்துக் கொண்டு நீதிமன்றத்திற்கு சென்று எப்படியாவது பதவியை பிடித்து விட வேண்டும் என பதவி ஆசையில் இருக்கிறார். திமுகவினருக்கு கட்சி பிளவு பட வேண்டும். மீண்டும் திமுக ஆட்சி வரவேண்டும் என நினைப்பில் உள்ளனர்.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி முதல்வர் ஆகிறார்.




பன்னீர் செல்வத்திடம் கையெழுத்து கேட்கும் பொழுது உடனே அம்மா  நினைவிடத்திற்கு சென்று பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்ற பேரில் போராட்டம் நடத்தினார். அதன் பிறகு எக்காரணத்தை கொண்டும் மன்னார்குடி கும்பல் சசிகலாவுடன் யாரும் தொடர்பு வைத்து கொள்ள கூடாது என தெரிவித்த பன்னீர்செல்வம் இன்று மன்னார்குடி கும்பலுடன் தொடர்பில் உள்ளார். தேவைப்பட்டால் டிடிவி தினகரனையும், சசிகலாவையும் சந்திப்பேன் என கூறி வருகிறார். 




தமிழகத்தில் மாதாந்திர மின்சார கட்டணம் அமலுக்கு கொண் டுவரப்படும் என்றனர். ஆட்சி பொறுப்பு ஏற்று ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. அந்த ஆர்ப்பாட்டத்தை மறைக்கும் வகையில் ரைடு நடத்தப்பட்டது. 




அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வது உறுதி. 2 கோடி மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று கூறி வருகின்றனர். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தில் 6000 கோடி அளவிற்கு ஊழல் செய்ய தயாராகி வருகிறார்கள் என்றார்.


காலையில் ஆர்ப்பாட்டம் - மாலையில் வழக்கு பதிவு.


கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக அதிமுக கொடிகளை கட்டியதாக மாஜி அமைச்சர் உட்பட, 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கரூர் மனோகரா கார்னர் பகுதியில், அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து, காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்காக மனோகரா கார்னர் பகுதியில் அதிமுக கொடிகள் கட்டப்பட்டன. இதனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுவதாக, போலீஸ் எஸ்.ஐ., அப்துல்லா, கரூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.




இதை அடுத்து, போலீசார், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட அவை தலைவர் திருவிகா, பகுதி செயலாளர்கள் சேரன் பழனிச்சாமி, சக்திவேல், கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதுசூதனன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதே போல், கரூர் அருகே புலியூரில் அதிமுக பொதுக்கூட்டத்திற்காக பிளக்ஸ், பேனர்களை அனுமதியில்லாமல் வைத்ததாக மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார் மீது, பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றன.