தமிழக அரசு மின் கட்டணம் உயர்த்தியதை கண்டித்து நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு அதிமுக வழக்கறிஞரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இன்பதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது, உள்கட்சி பிரச்னை பற்றி பேசும் அளவுக்கு நான் அதிமுகவில் பெரிய தலைவர் இல்லை ஷாக் அடிக்க வைக்கும் மின் கட்டணத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். தமிழக அரசு மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கிறது. இது திராவிட மாடல் அரசாங்கம் அல்ல, ஷாக் மாடல் அரசாங்கம். ஏனென்றால் அதிர்ச்சி தரும் செயலை ஒவ்வொரு நாளும் செய்து கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் பீதியில் உறைந்து போய் இருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமை, கொலைகள், கனிம வளங்கள் கடத்தல் என தினசரி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தரும் வகையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவாக தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த கருப்பு ஆட்சியை, இருட்டு ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் விதமாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.




 மின்சாரத்தை கண்டுபிடித்தது தாமஸ் ஆல்வா எடிசன். அந்த தாமஸ் ஆல்வா எடிசன் புறண்டு படுக்கிற அளவுக்கு அரசு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. எம்மதமும் சம்மதம் என்பதே அதிமுகவின் நோக்கம். எந்த மதத்தினரையும் புண்படுத்தினால் அது தவறானது. எல்லா நீதின்றத்திலும் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்வு பெற்றுள்ளோம். எனவே கூடிய விரைவில் பொதுச்செயலாளர் தேர்வு நடைபெறும். அதன் பிறகு எடப்பாடி தலைமையில் அதிமுக, திமுவை அழித்து ஒழிக்கும் முயற்சியில் வீறு நடைபோட்டு இயங்கும். எடப்பாடி தலைமையில் தான் 66 எம்எல்ஏக்கள் பெற்றிருக்கிறோம் என்பதை மூத்த தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு குறித்து கேள்வி எழுப்பியபோது, சட்டம் தெரியாதவர் சபாநாகர். முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது கூட ஒரு புகார் கொடுத்துள்ளார். சபாநாயகர் பதவி என்பநு மாண்புமிக்கது. அவர் குற்றம் சாட்டுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். சபாநாயகர் கொடுத்தது பொய் புகார் என்று தெரிந்து தான் அன்றைக்கு நீதிமன்றத்தில் அவர் தொடுத்த வழக்கை வாபஸ் பெற்றார்.




ஒருவேளை சட்டமன்றத்தின் மாண்பை காக்க அந்த வழக்கை வாபஸ் பெற்றிருந்தால்  இன்றைக்கும் இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும், அவ்வாறு பெறவில்லை என்றால் சட்டமன்ற மண்பை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் வழக்கு முடியும் வரை சபாநாயகர் பதவி விலகி இருக்க வேண்டும். எதிர்கட்சி கொறடாவாக இருக்க கூடிய வேலுமணிக்கு அந்த வாய்ப்பை இனி சபாநாயகர் வழங்குவாரா என்ற சந்தேகம் எழுகிறது. நாங்கள் வழக்கை நடத்த தயாராக இருக்கிறோம். வழக்கு கொடுத்தவர் என்ற முறையில் சபாநாயகர் நீதிமன்றம் வரவேண்டும், அப்போது நாங்கள் கேள்வி எழுப்புவோம். அவர் மீது இருக்கும் நிலமோசடி வழக்கு, அவர் வீட்டு முன்பு இருக்கும் ஓடையை மறித்து காம்பவுண்ட் கட்டியிருக்கிறார். அதற்கு பொதுப்பணித்துறை நோட்டீஸ் வழங்கியது. இந்த வழக்குகள் அனைத்தும் என்னவாயிற்று என்பதையெல்லாம் கேட்கவேண்டிய நிலை வரும். எனவே வழக்கு முடியும் வரை அவர் பதவி விலகி இருக்க வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், நெல்லை எம்பியின் மகனை மணல் கடத்தல் வழக்கில் தேடுகறார்கள். காவல்துறையை நான் பாராட்டுகிறேன். ஆனால் நான் விசாரித்தவரை நெல்லையில் திமுக இரண்டு அணிகளாக இருக்கின்றனர். அதில் ஒரு அணியினர் கொடுத்த தகவலின் பேரில்  நிர்பந்தத்தின் அடிப்படையில் தான் எம்பி மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும். முறைகேடாக இயங்கி வரும் தனியார் குவாரிகளை மூட வேண்டும். ஸ்டாலினின் தந்தை கருணாநிதியே அதிமுகவை அழித்து விடுவோம் என்று சொல்லி இன்று அவர் இல்லை. அதிமுக என்பது ஒரு ஆலமரம். இது காகிதப்பூ அல்ல. காகிதப் பூவெல்லாம் ஆலமரத்தை பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை என்று தெரிவித்தார்