ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மிகப்பெரிய சரித்திர வெற்றியை ஈவிகேஎஸ் பெறுவார் - ரூபி மனோகரன்

கேரள மாநிலத்தை போல் காட்டு பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கி உத்தரவிட வலியுறுத்தி முதலமைச்சருக்கு மனு அளிக்க உள்ளோம்.

Continues below advertisement

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் அரசு திட்டப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கமிட்டி பொருளாளருமான ரூபி மனோகரன் நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து நேரில் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது, "நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் தலைமை மருத்துவமனை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அந்த மருத்துவமனை நாங்குநேரி தொகுதியில் இருந்து மருத்துவமனை ராதாபுரத்திற்கு சென்று விட்டது. ஆனால் அதற்கு இணையாக ஒரு மருத்துவமனை அமைக்க உடனடியாக அமைச்சர் பத்து கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்ட பின்னரும் மருத்துவமனை தொடர்பான எந்த பணிகளும் இதுவரை நடக்க வில்லை. நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. களக்காடு பகுதியில் காட்டுப்பன்றி தொந்தரவு அதிகரித்துள்ளது. குறிப்பாக மஞ்சுவிளை பகுதியில் வாழை மரங்களை காட்டு பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். கேரள மாநிலத்தை போல் காட்டு பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கி உத்தரவிட வலியுறுத்தி முதலமைச்சருக்கு மனு அளிக்க உள்ளோம். அதன் மனுவை மாவட்ட ஆட்சியர் வழியாக இன்று அளிக்க உள்ளோம்.

Continues below advertisement

காட்டு பன்றி நடமாட்டம் உள்ள பகுதியில் மின் வேலி அமைக்கும் நடவடிக்கையையாவது அரசு உடனடியாக எடுக்க வேண்டும். வனவிலங்குகளால் பாதிப்பு உள்ளதாக கூறி  போராட்டம் நடத்தினால் விவசாயிகள் மீது பொய் வழக்கு ஒரு சில இடங்களில் போடப்படுகிறது. வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் இருப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தால் விவசாயிகள் நலம் பெறுவார்கள் என்பதை ஆராய்ந்து வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். களக்காடு பகுதியில் வாழை பதனிடும் மையம் தேவைப்படுகிறது. சட்டமன்றத்தில் இது தொடர்பாக பேசப்பட்டுள்ளது. வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் வாழை பதனிடும் மையம் அமைக்க கோரிக்கை வைக்கப்படும். நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் குடிநீருக்கு பல்வேறு பகுதியில் தட்டுப்பாடு இருந்து வருகிறது. நதிநீர் இணைப்பு திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக நிறைவு பெறும் என தெரிவிக்கின்றனர்.  அந்த திட்டம் நிறைவு பெறும் நிலையில் நாங்குநேரி பகுதியில் இருக்கும் தரிசு நிலத்தில் நிலத்தடி நீர் உயர வாய்ப்புள்ளது.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் குடிநீர் பிரச்சினை கடுமையான நிலையில் உள்ளது. காங்கிரஸ் அகில இந்திய மாநாட்டு விளம்பரத்தில் காமராஜர் படம் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது. வேண்டுமென்றே இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரியவில்லை. தமிழகத்தில் காமராஜர் பெயரை சொல்லாமல் எந்த கட்சியும் அரசியல் செய்ய முடியாது. காங்கிரஸ் மாநாட்டு விளம்பரத்தில் காமராஜர் படம் இல்லாமல் இருந்ததது தவறுதான் மிகவும் வருத்தம் அளிக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இது போன்ற தவறை பிற்காலத்தில் செய்யாது. ஈரோடு இடைத்தேர்தலில் மிகப்பெரிய சரித்திர வெற்றியை ஈவிகேஎஸ் இளங்கோவன் பெறுவார். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என ஈரோடு மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள். வாக்குக்கு பணம் கொடுக்கிறார்கள் என்பது எல்லா தேர்தலிலும் பேசும் ஒன்று. அண்ணாமலை  ஏதாவது ஒன்று சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார். அவர் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது" என தெரிவித்தார்.

Continues below advertisement