அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்று முதன்முதலாக சேலம் வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு அவரது இல்லம் அமைந்துள்ள சேலம் மாநகர் நெடுஞ்சாலை நகரில், சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மயிலாட்டம், ஒயிலாட்டம் என உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


பின்னர் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் இயக்கத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பேற்று உள்ளேன். சேலம் மாவட்டம் ஒரு ராசியான மாவட்டமாக பார்க்கப்படுகிறது. அதிமுகவை பல பேர் பலவிதமாக பேசி வருகின்றனர் அதை முறியடிக்கும் விதமாக தொண்டர் கூட்டங்கள் கூடி நாங்கள் இருக்கின்ற வரை அதிமுகவை தொட்டு பார்க்க முடியாது என்று நிரூபித்து காட்டியுள்ளனர். அதிமுக சரிந்துவிட்டது என்று சொன்னவர்கள் மூக்கின் மீது விரல் வைக்கும் அளவிற்கு, அது சரியவில்லை அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் அளவிற்கு காட்சியளிக்கிறது என்று கூறினார்.



அதிமுக கட்சியை தமிழகத்தில் எந்த கட்சியும் வெல்ல முடியாது. அதிமுகவில் உள்ளவர்கள் பிரதிபலனை எதிர்பார்க்கவில்லை. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் சேவைக்கு செய்கின்ற கட்சி அதிமுக. எந்த கொம்பனாலும் அதிமுக தொண்டனை கூட தொட்டுப் பார்க்க முடியாது. அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மீதும் பொய் வழக்கு முதல்வர் ஸ்டாலின் போட்டு வருகிறார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சியை அழிக்க, ஒழிக்க வேண்டும் என்று ஆளும் கட்சி செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் செயல்கள் பலிக்காது. கானல் நீராகத்தான் மாறும். அதிமுக தொண்டர் எதற்கும் அஞ்சமாட்டார்கள், எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சட்டப்படி சந்தித்து வெற்றி பெற்று காட்டுவோம் என்றார்.



அதிமுகவை ஒழிக்க ஒரு ஸ்டாலின் அல்ல, ஓராயிரம் ஸ்டாலின் பிறந்து வந்தாலும் தொட்டுப் பார்க்க முடியாது. திமுக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு வரும், நிர்வாகத் திறனற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சி கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக ஆட்சியில் திறந்து வைத்து வருகிறார்கள். நாங்கள் பெற்ற குழந்தைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பெயர் வைத்து வருகிறார். அதிமுக ஆட்சி காலம் பொற்கால ஆட்சி என்று மக்கள் பேசி வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எப்பொழுது ஆட்சி போகுமோ என்று மக்கள் பேசி வருகிறார்கள்.


தினந்தோறும் வழிப்பறி, கொள்ளை, பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது. எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் நிறைந்து காட்சியளிக்கிறது. இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இதை திமுக அரசு கட்டுப்படுத்தவில்லை. இதை எத்தனை முறை எடுத்துரைத்தும் திமுக அரசு அதை கண்டு கொள்ளவில்லை. இதற்கு முடிவு கட்ட வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.