ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான 118 பேர் கொண்ட வைத்திலிங்கம் தலைமையிலான பணிக்குழுவை ஓ.பன்னீர்செல்வம் அமைத்துள்ளார்


மேலும், பா.ஜ.க. போட்டியிடாவிட்டால் மட்டுமே போட்டியிடவுள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் அணி தெரிவித்துள்ளது. 


பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 2ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் மாதம் 2ம்  தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


 ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் பரபரப்பு பற்றிக்கொண்டது. தி.மு.க. கூட்டணியில் அந்த தொகுதியில் ஏற்கனவே உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சிக்கே அந்த தொகுதியை கொடுத்துவிட்டனர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக  உயிரிழந்த எம்.எல்.ஏ. ஈ.வெ.ரா. திருமகனின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனே போட்டியிடுகிறார்.




ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் இழுபறியும், குழப்பங்களும் நீடித்து வருவதால் அக்கட்சி தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர்.


அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கூறியதாவது, “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்குத்தான் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழு வேட்பாளரை அறிவிக்கும் என கூறினார்.


ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் யார் போட்டியிடுகிறார்கள் என்பதே கேள்விக்குறியாக இருந்து வருகிறது. பா.ஜ.க.வா? அ.தி.மு.க.வா? களத்தில் இறங்கப்போவது என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், அ.தி.மு.க.வே களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஈரோடு இடைத்தேர்தலுக்காக 117 பேர் கொண்ட பணிக்குழுவை நியமித்துள்ளது. இந்நிலையில் வைத்திலிங்கம் தலைமையிலான 118 பேர் கொண்ட பணிக்குழுவை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இன்று நியமித்துள்ளது.


ஆனால், அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் தாங்கள்தான் இடைத்தேர்தலில் போட்டி என்று கூறி வருவதால், அ.தி.மு.க.வில் யார் போட்டியிடுகிறார்கள் என்றும், இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.