வரும் பிப்ரவரி 3ஆம் தேதி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.


வரும் பிப்ரவரி 3ஆம் தேதி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.


ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். 


காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற திருமகன் ஈவேரா, மாரடைப்பு காரணமாக காலமானதால், அந்தத்தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திருமகன் ஈவெராவின் தந்தையான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இடைதேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். 


பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


இதற்கிடையே, முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து இளங்கோவன் ஆதரவு கேட்டு வந்தார். அந்த வகையில், மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவை கோரி கமலை இளங்கோவன் 23ஆம் தேதி சந்தித்தார். சந்திப்பு நடைபெற்று இரண்டு நாட்களுக்கு பின் மக்கள் நீதி மய்யம் சார்பாக ஆதரவு தெரிவிக்கப்பட்டது.


அதேசமயம் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. ஆனால் கூட்டணி நலன், எதிர்கால மக்கள் நலன் கருதி அதிமுக போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சம்மதம் தெரிவித்து விட்டது. 


ஆனால் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ள நிலையில் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை விரைவில் அறிவிக்க உள்ளார். 


அதேசமயம் தாங்கள் தான் உண்மையான அதிமுக என கூறும் ஓ.பன்னீர்செல்வம் இடைத்தேர்தலில் தங்கள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிமுக சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 


இதற்கிடையே, அமமுக சார்பில் சிவபிரசாந்த் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இவர் அக்கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.


இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த  டிடிவி தினகரன், ஈரோடு தேர்தலில் அமமுகவினர் 294 பேர் தேர்தல் பணிக்குழுவில் ஈடுபடுவார்கள் என்றும், இந்த தேர்தலில் திமுகவிற்கு பாடம் புகட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.