ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த ஜனவரி 4-ந் தேதி காலமானார். அவரது மறைவால், அவர் எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.


ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டின் மொத்த அரசியல் பார்வையும் ஈரோடு தொகுதியின் பக்கமே திரும்பியது. ஈரோடு தொகுதிகை தக்க வைக்க  தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியும், தொகுதியை கைப்பற்ற எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.


இன்று வேட்புமனுத்தாக்கல் 


இந்த நிலையில், ஈரோடு தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. ஈரோடு தொகுதியில் வரும் பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, மார்ச் 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இந்த முறை தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடுகின்றார்.


அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் யார் போட்டியிடுகிறார்கள் என்பது இதுவரை இழுபறியாகவே இருக்கிறது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட மும்முரம் காட்டி வருகின்றனர். அதேசமயம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பா.ஜ.க. போட்டியிடாவிட்டால் போட்டியிடுவோம் என்றும், இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் என்றும் கூறி வருகின்றனர். பா.ஜ.க.வினர் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்று அறிவிக்க உள்ளனர். தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் , அ.ம.மு.க. சார்பில் சிவபிரசாத் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார்.


இளங்கோவன்:


ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குவதால் தேர்தல் சூடுபிடித்துள்ளது. இளங்கோவன் 3-ந் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இந்த தொகுதியான கொங்கு மண்டலத்தில் வருவதால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தங்களால் எளிதில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் களமிறங்குகின்றனர். தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக தி.மு.க.வினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர், போலீசார் அவ்வப்போது பல இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.


ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை நடத்துகின்றனர். இந்த கூட்டத்திற்கு பிறகு பா.ஜ.க. ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுமா? அல்லது அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளிக்குமா? என்று அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்று முதல் வேட்புமனுத்தாக்கல் - சூடுபிடிக்கிறது அரசியல் களம்..!


மேலும் படிக்க: ‘இரட்டை இலை கிடைக்காவிட்டால் புதிய சின்னம்’ எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்து வைத்திருக்கும் சின்னம் என்ன..?