ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனு நாளை தொடங்கவுள்ள நிலையில், இன்னும் அதிமுக சார்பில் வேட்பாளரை அறிவிக்காமல் எடப்பாடி பழனிசாமி தரப்பு தாமதம் செய்து வருகிறது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் இரட்டை இலையை தங்களுக்கு ஒதுக்காமல் போனால், மக்களுக்கு எளிதில் கொண்டுபோய் சேர்க்கும் வகையிலான புதிய சின்னத்தை தேர்வு செய்து வாங்குவதில் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.


உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்த எடப்பாடி 


இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு தான் அனுப்பும் வேட்பாளர் படிவத்தை தேர்தல் ஆணையம் ஏற்க அறிவுறுத்தல் கொடுக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் அவசரமாக முறையீடு செய்துள்ளார்.


இந்த முறையீடு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் 3 நாளில் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


என்ன சொல்லும் தேர்தல் ஆணையம் ? 


மூன்று நாட்கள் கழித்து தேர்தல் ஆணையம் அளிக்கும் பதில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக இருந்தால், அவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும். ஆனால், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், நேரடியாக இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் சொல்வதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு என அரசியல் பார்வையாளர்கள் கணிக்கிறார்கள்.


ஓபிஎஸ் – ஈபிஎஸ் சமர்பித்துள்ள ஆவணங்களை படித்து பார்த்து முடிவு எடுப்பதற்கு காலதாமதம் ஆகும் என்பதால், இடைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இருவரும் போட்டியிட விரும்பினால், இரட்டை இலை சின்னத்திற்கு பதில் பட்டியலில் உள்ள அவர்கள் விரும்பும் சின்னத்தை தற்காலிகமாக பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் கூறவே வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன என கூறப்படுகிறது.


இரட்டை இலை இல்லையென்றால் என்ன சின்னம் ?


அதனால், இரட்டை இலை கிடைக்காத நிலையில், தேர்தல் ஆணைய பட்டியலில் உள்ள மற்றொரு சின்னம் எதை தேர்வு செய்யலாம் என்றும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். அதில், விசில், மோதிரம், ஹெலிகாப்டர், எண்ணெய்சட்டி, ஆட்டோ, கைவண்டி ஆகிய சின்னங்களில் ஒன்றை தேர்வு செய்தால், மக்களிடையே கொண்டுபோய் சேர்ப்பதற்கும் பிரபலப்படுத்துவதற்கும் ஏதுவாக இருக்கும் என்று யோசனை செய்யப்பட்டிருக்கிறது.


குறிப்பாக, கைவண்டி சின்னத்தை தேர்வு செய்யலாம் என எடப்பாடி பழனிசாமி நினைத்துள்ளதாக கூறப்படுகிறது. தொழிலாளி திரைப்படத்தில் கைவண்டி இழுப்பவராக எம்.ஜி.ஆர் நடத்திருப்பார். அதனால், அந்த புகைப்படத்தோடு சின்னத்தை எளிதாக பிரபலப்படுத்திவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமிதரப்பு திட்டமிட்டிருக்கிறது.


கிடைத்தால் மகிழ்ச்சி ; கிடைக்காவிட்டால் கூடுதல் மகிழ்ச்சி


 அதே நேரத்தில், தன்னுடைய ஆதரவாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசும்போதும் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லையென்றால் கூடுதல் மகிழ்ச்சி. எப்படியிருந்தாலும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு மக்களின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்பதை நிரூபணம் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதோடு, சின்னம் இருந்து தேர்தலில் போட்டியிட்டு வாக்குகள் பெறுவதை காட்டிலும் சின்னம் இன்றி சுயேட்டையாக போட்டியிட்டு மக்களின் ஆதரவை பெற்றால் தனிப்பெருந்தலைவராக தான் உயரலாம் என்றும் எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டு வைத்திருக்கிறார். அதனால்தான், ஈரோட்டில் அதிமுக பொறுப்பாளர்களுடன் தொடர்ந்து 8 மணி நேரம் ஆலோசனை நடத்திய அவர். ஒவ்வொரு பூத் வாரியாக எத்தனை வாக்காளர்கள் உள்ளனர், அவர்கள் என்ன சமூகத்தை சார்ந்தவர்கள், அவர்களின் வாக்குகளை எப்படி பெறுவது என்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தியிருக்கிறார்.


’ஆர்.கே.நகரில் நடந்ததே ஈரோடு கிழக்கில் நடக்கும்’ 


எடப்பாடி பழனிசாமியுடன் அதிக எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் நிர்வாகிகள் இருந்தாலும் ஓபிஎஸ் தரப்பும் இரட்டை இலைக்கு உரிமைக் கோரிவருவதால், இந்த இடைத் தேர்தலில் சின்னம் தற்காலிகமாக பயன்பாட்டு உரிமை ரத்து செய்யப்படும் என்றே  அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள்.


கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது சசிகலா, டிடிவிதினகரன், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒன்றாகவும் ஓபிஎஸ் தனியாக பிரிந்தும் தேர்தல் ஆணையத்தை நாடியபோது, இரட்டை சிலை சின்னம் தற்காலிகமாக முடக்கம் செய்யப்பட்டு, டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னமும், ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை மின் விளக்கு சின்னமும் தேர்தல் ஆணையத்தால் தரப்பட்டது. அப்போதும் இப்போது எடப்படி பழனிசாமிக்கு அதிக அளவில் எம்.எல்.ஏக்களும் நிர்வாகிகளும் ஆதரவாக இருப்பதைபோன்று, சசிகலா அணிக்கு அதிக நிர்வாகிகள் ஆதரவு இருந்தது. ஆனால், தேர்தல் ஆணையம் சின்னத்தை தற்காலிகமாக முடக்கியது.


இப்போது நடக்கவுள்ள ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலிலும் அதே மாதிரியான நிலைதான் அதிமுகவிற்கு ஏற்படும் என கூறப்படுகிறது.