தமிழ்நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஈரோடு இடைத்தேர்தலில் சுமார் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு மட்டுமே வெற்றி பெற்றார்.
டெபாசிட் இழப்பு:
2வது இடம் பிடித்த தென்னரசு 43 ஆயிரத்து 981 வாக்குகளும், 3வது இடம்பிடித்த நாம் தமிழர் 10 ஆயிரத்து 804 வாக்குகளும், நான்காவது இடம்பிடித்த தே.மு.தி.க. வேட்பாளர் 1301 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி 2008ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொகுதி உருவானபோது இந்த தொகுதயில் இருந்து 2011ம் ஆண்டு சட்டசபைக்கு முதன்முறையாக தேர்வானவர் தே.மு.தி.க. வேட்பாளர். ஆனால், நடப்பு தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் வெறும் 1301 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
நாளுக்கு நாள் தே.மு.தி.க.வின் நிலைமை பரிதாபமாகவே ஆகிவருகிறது என்பதற்கு இந்த ஈரோடு இடைத்தேர்தலும் நமக்கு உணர்த்தியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தே.மு.தி.க. சார்பில் இந்த தொகுதியில் களமிறங்கிய பூஞ்சைராமன் 6 ஆயிரத்து 776 வாக்குகள் மட்டுமே பெற்றார். இந்த இடைத்தேர்தலில் 2 ஆயிரம் வாக்குகளைக்கூட பெற முடியாத சூழலுக்கு தே.மு.தி.க. தள்ளப்பட்டுள்ளது.
பரிதாப நிலையில் தே.மு.தி.க.:
தமிழ்நாட்டு அரசியலில் தி.மு.க., அ.தி.மு.க. மட்டுமே கோலாச்சிக் கொண்டிருந்த நிலையில், கடந்த 2004ம் ஆண்டு லட்சோப லட்ச தொண்டர்கள் முன்னிலையில் தே.மு.தி.க.வைத் தொடங்கி தமிழ்நாட்டையே அலறவிட்டவர் விஜயகாந்த். அடுத்த தேர்தலில் 234 தொகுதிகளில் துணிச்சலாக தனித்து களமிறங்கியவர். தனி ஆளாக சட்டசபைக்கு போட்டியிட்ட முதல் தேர்தலில் சென்றவர். 2011ம் ஆண்டு தே.மு.தி.க. சந்தித்த 2வது பொதுத்தேர்தலிலே சட்டமன்ற எதிர்க்கட்சி அந்தஸ்தை தே.மு.தி,க. பெற்றது.
அதன்பின்பு, விஜயகாந்தின் உடல்நலக்குறைவு, கூட்டணி வைப்பதில் ஏற்பட்ட குளறுபடி, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வேறு கட்சிக்கு தாவியது உள்ளிட்ட பல காரணங்களால் தே.மு.தி.க. சரிந்தேவிட்டது என்றே கூறலாம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என ஒற்றை முகங்களுக்காக மட்டுமே ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வை அதன் தொண்டர்கள் விரு்மபினார்களோ, அதேபோல விஜயகாந்த் எனும் ஒற்றை முகத்திற்காக தே.மு.தி.க. மீது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
வேதனையில் விஜயகாந்த் ஆதரவாளர்கள்:
ஆனால், விஜயகாந்த் தற்போது உடல்நலம் குறைந்து தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருப்பதால் தே.மு.தி.க.வும் அரசியலில் தீவிரமாக கவனிக்கப்படாமல் கவலைக்குரிய நிலையிலே உள்ளது. பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் ஆகியோரே முக்கிய முடிவுகளை எடுக்கின்றனர். விஜயகாந்தின் வாரிசான விஜயபிரபாகரன் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்த்த தொண்டர்களுக்கும் ஏமாற்றமே ஏற்பட்டது என்றே கூறலாம்.
கம்பீரமாக சட்டசபைக்குள் கால்தடம் பதித்த விஜயகாந்தின் கட்சியான தே.மு.தி.க. கடந்த சில ஆண்டுகளாக போட்டியிடும் பல்வேறு தேர்தல்களிலும், தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலிலும் டெபாசிட் கூட வாங்க இயலாத நிலைக்கு ஆளாகியிருப்பது திரையிலும், அரசியலிலும் விஜயகாந்தை ரசித்த தொண்டர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் வேதனையையே ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.