நெல்லை ஸ்ரீபுரத்தில் ஊருடையார்புரம் குடியிருப்பு செல்லும் சாலை புதிதாக அமைக்கும் பணி இன்று நடைபெற்றது. இதனை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், மற்றும்  நெல்லை சட்டமன்ற உறுப்பினரும் பாஜக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். பின்னர்  நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், "ஸ்ரீ புரம் பகுதியில் 800 மீட்டர் தூரத்திற்கு  ஒரு கோடி ரூபாய் செலவில் தார்சாலை அமைக்கப்பட பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. இன்னும்  மாநகராட்சியை பொறுத்தவரை 24 கோடி ரூபாய் செலவில் சாலைகளும், பாதாள சாக்கடை பழுது பார்ப்பதற்காகவும்  மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டு  அதன் அடிப்படையில் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். ஈரோடு இடைத்தேர்தலில்  நாங்கள் ஆதரவு கொடுத்துள்ள இரட்டை இலை சின்னம் நிச்சயமாக வெற்றி பெரும். நாங்கள் எங்களது கூட்டணி சார்பில் அனைவரையும் ஒன்றுபடுத்தி அனைவரும் ஒரே அணியில் இருந்து ஆளுங்கட்சிக்கு எதிரான ஒரு அணியில் போராடிக் கொண்டிருக்கிறோம்" என்றார். 


தொடர்ந்து பேசிய  அவர், "முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு கடலில் தான் பேனா வைக்க வேண்டும் என்ற தேவை இல்லை, கடலில் பேனா சின்னம் அமைத்தால் சுற்றுசூழல் மாசுபடும், மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும். அத்துடன் அதிகமான செலவும் ஏற்படும். எனவே அதற்கு மாற்றாக அதே செலவில் வேறொரு இடத்தில் பேனா சின்னத்தை நிறுவலாம்" என்று பாஜக சட்டமன்ற குழு தலைவரும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்