ஈரோட்டில் அதிமுகவினர் அனுமதியின்றி கூட்டமாக கூடியிருந்த தனியார் திருமண மண்டபத்தை தேர்தல் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்த நிலையில், அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ள நிலையில் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தரப்பில் அந்த தொகுதியின் முன்னால் எம்.எல்.ஏ.,வான தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். 


ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணியில் பல்வேறு கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரை மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில கட்சியினர் பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தொடர்ந்து சில வேட்பாளர்கள் கூட்டம் சாட்டி வந்தனர். இந்நிலையில் ஈரோடு கிருஷ்ணன் பாளையத்தில் உள்ள பிரகாஷ் திருமண மண்டபத்தில் அதிமுகவினர் அனுமதி இன்றி கூட்டம் நடத்தி பொது மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அதிகாரி முத்துகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மண்டபத்தில் நுழைந்து சோதனை நடத்த முயன்றனர்.




அப்போது அதிமுகவினர் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை தடுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஈரோடு நகர காவல்துறை கண்காணிப்பாளர் அனந்தகுமார் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு, காவல் துறையினரின் உதவியோடு தேர்தல் அதிகாரிகள் மண்டபத்தில் உள்ள பைகள் மற்றும் பீரோக்களில் சோதனை செய்தனர். பின்னர் அதிமுகவினரின் கடும் எதிர்ப்பையும் மீறி அவர்களை மண்டபத்தை விட்டு வெளியேற்றி விட்டு தேர்தல் அதிகாரிகள் பிரகாஷ் திருமண மண்டபத்திற்கு சீல் வைத்தனர். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுகவினர், ”இந்த தொகுதியின் திமுக தேர்தல் பொறுப்பாளரான செந்தில் பாலாஜி தூண்டுதலின் பெயரில் காவல் துறை இவ்வாறு செயல்படுகிறது. ஆளும் கட்சியினர் காவல் துறையை ஏவி அராஜகத்தில் ஈடுபடுகின்றனர்” எனக் குற்றம்சாட்டினர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண