ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். குக்கர் சின்னம் ஒதுக்காத காரணத்தால் போட்டியிடவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 


ஈரோடு கிழக்கு தொகுதிக்கு , அமமுக சார்பாக வேட்பாளர் அறிவித்த நிலையில், தற்போது போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது அமமுக தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.




இது தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 



ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, களத்தில் பரப்புரை பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

குக்கர் சின்னம் ஒதுக்கப்படவில்லை:

 

இந்தச் சூழலில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஒதுக்கப்பட்ட பிரஷர் குக்கர் சின்னத்தை, இடைத்தேர்தல் காலங்களில் ஒதுக்க இயலாது என தலைமை தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கழகத்தின் சார்பில் 27.01.2023 மற்றும் 31.01.2023 ஆகிய தேதிகளில் அளிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் இன்று பதிலளித்துள்ளது.




 

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பொதுத்தேர்தல் காலங்களில் குக்கர் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், தற்போது இடைத்தேர்தல் காலங்களில் அவ்வாறு ஒதுக்கீடு செய்ய இயலாது என தெரிவித்துள்ளது.




 

”குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்”

 

பாராளுமன்ற பொதுத்தேர்தல் ஓராண்டு காலத்திற்குள் வரவிருக்கும் சூழலில், புதியதோர் சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, வரவிருக்கிற பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் நமது வெற்றிச்சின்னமான குக்கர் சின்னத்தோடு தேர்தல்களை சந்திப்போம்.

 

இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதே சரியாக இருக்கும் என்ற தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆலோசனையைக் கருத்தில்கொண்டு, நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

இடைத்தேர்தல்:


ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைதேர்தல் தேதியை, தேர்தல் ஆணையம் பிப்ரவரி 27ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து ஈரோடு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக தரப்பில் கூட்டணி கட்சி சார்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வேட்பாளர் அறிவித்தது முதல் திமுகவினர் வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


அதிமுகவுக்கு சாதகம்:


இது ஒருபுறம் இருக்க அதிமுக தரப்பில் பல குழப்பங்கள் இருந்து வந்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுக (எடப்பாடி தரப்பு) வேட்பாளராக, தென்னரசு என்பவரை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது


இந்நிலையில், வேட்பாளர் அறிவித்தும், போட்டியிடவில்லை என அமமுக அறிவித்துள்ளது,  வேண்டும் என்றே அதிமுகவுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எப்படியிருந்தாலும், இது அதிகமுகவுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதாகவே பார்க்கப்படுகிறது.