தனது இந்திய ஒற்றுமை பயணம் குறித்து ராகுல் காந்தி மக்களவையில் பேசினார். 


அப்போது, "ஒற்றுமை பயணத்தில் மக்களின் குரல்களை கேட்டேன். அவர்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பெண்கள், குழந்தைகள், முதியவர்களிடம் பேசினேன். ஆயிரக்கணக்கான விவாசயிகள் தங்கள் குறைகளை கூறினர் . நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பழங்குடியினர் கூறுகின்றனர். விலையேற்றம், விவசாயம் பாதிப்பு நாட்டின் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது”  என்றார். 




”ஒன்றிய அரசின் கொள்கைகளால் நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து துறைகளிலும் அதானி புகுந்து விடுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தற்போது நாடு முழுவதும் அதானி விவகாரம் குறித்து பேசப்படுகிறது. மேலும், தனது ஒற்றுமை பயணத்தின் போது குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரது கருத்துக்களையும் காது கொடுத்து கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு” எனவும் அவர் கேள்வி எழுப்பினார். 

 

”ஒற்றுமை நடைபயணத்தின் போது மக்களின் ஆழமான கருத்துக்களை கேட்க முடிந்தது. மேலும், ஒற்றுமை பயணத்தின் போது என்னிடம் பேசிய பலர் நாட்டின் பணவீக்கம் குறித்தும், வேலையின்மை குறித்து பேசினர். அக்னி வீர் திட்டம் இந்திய ராணுவத்தை பலவீனப்படுத்தும் திட்டம் என மக்கள் அஞ்சுகின்றனர். அதானி இத்தனை சொத்துக்களை சேர்க்க யார் உதவியது? ஒரு சில ஆண்டுகளிலேயே அதானி சொத்து மதிப்பு மளமளவென உயர்ந்தது எப்படி? விமான நிலையங்களை அமைக்கும் திட்டங்களை ஏன் அதானியிடம் மத்திய அரசு திணித்து கொடுக்கிறது” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.