தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த கட்சிகளும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மும்முரமாக இருக்க, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி தனி ட்ராக்கில் சென்று கொண்டிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பேசு பொருள் ஆகியுள்ளது.  ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், அனைத்துக் கட்சிகளும், கூட்டணியை சரிசெய்து கொள்வது, வேட்பாளர்களை அறிவித்து, பிரச்சாரத்தில் ஈடுபடுவது என சுறுசுறுப்பாக சுழல ஆரம்பித்துவிட்டனர்.


இடைத்தேர்தல் களம் பக்கமே செல்ல பாட்டாளி மக்கள் கட்சி செல்லவில்லை. அதேபோல் தேர்தல் நடைபெற உள்ள இடமும் வட மாவட்டம் இல்லை என்பதால், பாமக அந்த தேர்தலை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. குறித்து அவ்வப்பொழுது செய்தியாளர்களை சந்திக்கும் அன்புமணி ராமதாஸ் கூறுகையில் , "பாமகவைப் பொறுத்தவரை, ஆட்சி அமைக்க மெஜாரிட்டிக்கு ஒரு சில இடங்கள் தேவைப்படுகிறது என்ற நிலையில் வேண்டுமானால் இடைத்தேர்தல் நடத்தலாம். சுயேட்சைகள் இறந்து விட்டால் இடைத்தேர்தல் நடத்தலாம். மாறாக தேவையில்லாத நேரங்களில் எந்த கட்சியின் உறுப்பினர் இறந்தாரோ, அவர்கள் கட்சியின் சார்பில் ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்ப அந்த கட்சியின் தலைமைக்கு அதிகாரத்தை விட்டு விட வேண்டும், அது தொடர்பான சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். இது எங்களுடைய பல வருட கோரிக்கையாக இருக்கிறது " என்கிறார் அன்புமணி.

 



 கடலூர் மாவட்டத்தில் முதன்மை பிரச்சனையாக இருக்கும் என்எல்சி நிலம் கையகப்படுத்துதல் விவகாரத்தில் அன்புமணி தொடர்ந்து அந்த மக்களுக்காக ஆதரவாக குரல் கொடுத்து செயல்பட்டு வருகிறார். அதேபோல சமீபத்தில் நடைபெற்ற குறிஞ்சிப்பாடி பொதுக்குழு கூட்டத்தில் வேட்டியை மடித்து கட்டி களத்தில் இறங்கி போராடுவேன் என பேசியது அந்த கட்சி இளைஞர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.



அதேபோல்  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட்டில் மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்பதைக் கண்டித்து  பொதுக்கூட்டத்தையும் நடத்தி இருந்தார். திருவாரூர்  வட்டத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார். இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகையில்,  பிற கட்சிகளின் கவனம் ஒரே தொகுதியில் இருக்கும்பொழுது, பாமக அதிகமாக இருக்கும் வட மாவட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அன்புமணியின் திட்டமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.