ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு ஒதுக்க வேண்டும் என்று ஈரோட்டில் நடைபெற்ற தமாகா நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியின்கீழ் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா போட்டியிட்டார். இதில் 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார்.


இதற்கிடையே திருமகன் ஈவெரா உடல்நலக் குறைவால் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், வேட்பு மனுத் தாக்கல் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது. 


இந்த நிலையில் தொகுதியில் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன. அதிமுக சார்பில் யார் நிறுத்தப்படுவார்கள் என்று மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.


இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு ஒதுக்க வேண்டும் என்று ஈரோட்டில் நடைபெற்ற தமாகா நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


இதுகுறித்து யுவராஜா தலைமையில் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்வாகிகள் கூறும்போது, ''ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் தமாகாவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஜி.கே.வாசன் கூட்டணிக் கட்சித் தலைவர்களோடு பேசி, மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியை தமாகாவுக்கு ஒதுக்க வேண்டும். அவ்வாறு கலந்துபேசி அறிவிக்கப்படும் தொகுதி வேட்பாளருக்கு, தமாகா முழு மனதுடன் பணியாற்றும் என்று முடிவு எடுத்துள்ளோம்'' என்று தெரிவித்தனர். 


இது அதிமுக கூட்டணியில் போர்க் கொடியை ஏற்படுத்தி உள்ளதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. முன்னதாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி, கூட்டணிக்கு வலு சேர்க்கும் வகையில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 




திமுக- காங்கிரஸ்


ஆளும் கட்சியாக இருக்கும் திமுக, இந்த தொகுதியில் போட்டியிடப்போவது யார் என்பது குறித்து தீவிர ஆலோசனை செய்து வருகிறது. ஏற்கனவே இந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், இடைத்தேர்தலிலும்  காங்கிரஸ் போட்டியிட உள்ளது. இங்கு காங்கிரஸ்தான் போட்டியிடும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் சார்பில் மறைந்த திருமகனின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவனோ அல்லது தாய் பூர்ணிமாவோ போட்டியிடுவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.