ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதில் போட்டியிடுவது குறித்து த.மா.கா. இளைஞரணித் தலைவர் யுவராஜா விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியின்கீழ் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா போட்டியிட்டார். இதில் 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார்.
இதற்கிடையே திருமகன் ஈவெரா உடல்நலக் குறைவால் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனுத் தாக்கல் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தொகுதியில் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன. அதிமுக சார்பில் யார் நிறுத்தப்படுவார்கள் என்று மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்த நிலையில் ABP Nadu சார்பில் யுவராஜாவிடம் பேசினோம். அப்போது அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:
’’இடைத் தேர்தலில் நீங்கள் போட்டியிடுகிறீர்களா?
த.மா.கா. சார்பில் போட்டியிடத் தயாராக இருக்கிறேன். அதே நேரத்தில் அதிமுக போட்டியிட முடிவு செய்கிறது என்றாலும் ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறோம்.
அதிமுக என்ன சொல்கிறது?
நேற்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனிடம், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாகப் பேசினார். இன்றும் (ஜனவரி 19) அதிமுக தரப்பில் ஒரு குழு சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இதில் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஜெயக்குமார், கோகுல இந்திரா, பெஞ்சமின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல ஈரோட்டிலும் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு நடக்கிறது. அதிமுக, தமாகா கூட்டணிக் கட்சிப் பேச்சுவார்த்தை நாளை (ஜன.20) நடைபெற உள்ளது.
த.மா.கா. ஒருவேளை போட்டியிட்டால் என்ன சின்னத்தில் நிற்பீர்கள்?
இரட்டை இலை சின்னத்தில் நிற்கலாம். கடந்த முறை அதிமுகவின் சின்னத்திலேயே போட்டியிட்டோம். இந்த முறை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தனிச் சின்னத்தில் நிற்கவும் வாய்ப்புள்ளது.
த.மா.காவின் சைக்கிள் சின்னம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருவதால், 2019 தேர்தலில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டோம். ஆட்டோ சின்னம் கிடைத்தால், மீண்டும் அதிலேயே நிற்க வாய்ப்புள்ளது.
தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?
பண பலம், அதிகார பலம், ஆளுங்கட்சி என்ற அனைத்தையும் தாண்டி வெல்ல வேண்டும். சவாலாகத்தான் இருக்கும். ஆனாலும் நாங்கள் போட்டியிட்டு, வெல்வோம்.
இந்த முறை திமுக கூட்டணியில் ஈவிகேஸ் இளங்கோவன் நிற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளதே.. அனுதாப அலை வெற்றியை சாத்தியமாக்குமா?
கடந்த ஆண்டுகளில் 2 முறை போட்டியிட்டு ஈவிகேஸ் தோல்வியையே தழுவினார். தொகுதியில் அவருக்கெனத் தனிச் செல்வாக்கு ஏதுமில்லை. கடந்த முறை கூட்டணி பலன், பொய்யான வாக்குறுதியால் வென்றார்கள். இம்முறை சொத்துவரி, வீட்டு வரி உயர்த்தப்பட்டதால், தொகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள். ஆளுங்கட்சி பலத்தைத் தாண்டி நாங்கள் வெல்வோம்’’.
இவ்வாறு யுவராஜா தெரிவித்தார்.
அதிமுக தரப்பில் என்ன நடக்கிறது?
இடைத் தேர்தலில் அதிமுக நிலைப்பாடு குறித்து அரசியல் வட்டாரத்தில் விசாரித்தபோது, ''தேர்தலில் போட்டியிடாவிட்டால் 'எடப்பாடி பழனிசாமி பயந்துவிட்டார். அதிமுக தயங்குகிறது' என்று விமர்சனங்கள் எழும் என்று ஈபிஎஸ் தரப்பு யோசிக்கிறது. அதே நேரத்தில் சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், நாங்களே போட்டியிடுகிறோம் என்றும் அவர்களால் சொல்ல முடியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை, அவசர வழக்காக விசாரிக்கச் சொல்ல அதிமுக முடிவு செய்துள்ளது. இதனால் வேட்பாளரை முடிவு செய்வதில் இழுபறி நீடிக்கிறது'' என்று தெரிவித்தனர்.