ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற திருமகன் ஈவேரா, மாரடைப்பு காரணமாக காலமானதால், அந்தத்தொகுதிக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிப்பு:
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற திருமகன் ஈவேரா, மாரடைப்பு காரணமாக காலமானதால், அந்தத்தொகுதிக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி,
”காங்கிரஸ்தான் போட்டியிடும்”
ஈரோடு எங்கள் தொகுதி, நாங்கள் நின்ற தொகுதி, வென்ற தொகுதி , ஆகையால் இடைத்தேர்தலில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்று அழகிரி தெரிவித்தார். இது குறித்து தோழமை கட்சிகளான திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு தருமாறு கேட்க இருக்கிறோம். இன்று மாலை, இவர்களை சந்தித்து பேச இருக்கிறோம் எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்தார்.
ஆளும் கட்சியாக இருக்கும் திமுக, இந்த தொகுதியில் போட்டியிடப்போவது யார் என்பது குறித்து தீவிர ஆலோசனை செய்து வருகிறது. ஏற்கனவே இந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், இடைதேர்தலிலும் காங்கிரஸ் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச்சூழலில், திருமகனின் தந்தையும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனே, அந்தத்தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இடைத்தேர்தலை பொறுத்தமட்டில், மறைந்த திருமகனின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவனோ அல்லது திருமகனின் மனைவி பூர்ணிமாவோ போட்டியிடுவதாக இருந்தால், காங்கிரஸ் கட்சிக்கு அந்தத் தொகுதியை ஒதுக்குவது என்றும் அவர்கள் போட்டியிடவில்லை என்றால், திமுக-வே நேரடியாக களமிறங்கலாம் என்றும் திமுக தலைமையகம் தீர்மானித்திருந்தது.
அதற்கேற்ப ஈரோடு திமுக-வினரும் தேர்தல் பணிக்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தமிழக காங்கிரஸும் ஈவிகேஸ் இளங்கோவன் போட்டியிட வேண்டும் என அழுத்தம் கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், இன்று மாலையோ அல்லது ஒரு சில நாட்களிலோ உறுதியான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.