ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பார்வைகள் ஈரோடு மீதுதான் இருக்கிறது. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி எந்தவித இழுபறியும் இன்றி மிக தெளிவாக உள்ளனர். ஆனால், அ.தி.மு.க., - பா.ஜ.க. கூட்டணியில் தற்போது வரை இழுபறியாகவே உள்ளது.


பா.ஜ.க. நிலைப்பாடு:


அ.தி.மு.க.வின் உட்கட்சியில் மட்டுமின்றி, கூட்டணி தரப்பினர் மத்தியிலும் இழுபறி நீடித்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில், இதுவரை அ.தி.மு.க. வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படவில்லை. அ.தி.மு.க. இடைத்தேர்தலில் நிற்பதற்கு ஆதரவு அளிக்க பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு சென்று எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் நேரில் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், பா.ஜ.க.வினர் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்தனர்.




இதையடுத்து, ஜனவரி 31-ந் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பா.ஜ.க.வின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பா.ஜ.க. தங்களது நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ளனர். சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு பா.ஜ.க.வினர் ஆலோசனை நடத்த உள்ளனர். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட  தலைவர்களும் பங்கேற்கின்றனர்.


அ.தி.மு.க.வுக்கு ஆதரவு உண்டா?


முன்னதாக, பா.ஜ.க.வும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வந்த நிலையில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியை எதிர்க்க பெரிய கட்சி போட்டியிடுவதே சரியானதாக இருக்கும் என்று கூறியிருந்தார். ஆனாலும், வெளிப்படையாக அவர் பா.ஜ.க.வின் ஆதரவு யாருக்கு? என்று அறிவிக்கவில்லை. அதேசமயம், கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.




இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் வழக்கு ஒன்றில் நேற்று உச்சநீதிமன்றம் 3 நாட்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இரட்டை இலை சின்ன விவகாரத்தினால் இதுவரை ஈரோடு தொகுதிக்கான வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் அறிவிக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடாவிட்டால் நாங்கள் போட்டியிடுவோம் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் திட்டவட்டமாக உள்ளனர்.


எதிர்பார்ப்பு:


இந்த நிலையில், பா.ஜ.க.வின் இன்றைய கூட்டத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்று அறிவிக்கப்பட்டால் பா.ஜ.க. – எடப்பாடி பழனிசாமி தரப்ப அ.தி.மு.க. உறவு முறிகிறதா? என்ற கேள்வி பெரிதாக எழும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், பா.ஜ.க.வின் இன்றைய நிலைப்பாடு மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இடைத்தேர்தலில் மற்ற கட்சிகளான தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி, நாம் தமிழர், அ.ம.மு.க. தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்று முதல் வேட்புமனுத்தாக்கல் - சூடுபிடிக்கிறது அரசியல் களம்..!


மேலும் படிக்க: ‘இரட்டை இலை கிடைக்காவிட்டால் புதிய சின்னம்’ எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்து வைத்திருக்கும் சின்னம் என்ன..?