மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டியில், ”நாளை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், எந்தவித தகவலும் தெரிவிக்காமலும், கருத்து கேட்காமலும், உயர்கல்வி துறை அமைச்சரான எனக்கும் தெரிவிக்காமல், கௌரவ விருந்தினர் என அழைக்கிறார்கள்.






துணைவேந்தரை கேட்டால் , தனக்கு எதுவும் தெரியாது எனவும் எல்லாம் ஆளுநர் மாளிகையில் இருந்துதான் சொல்கிறார்கள் என தெரிவிக்கிறார். பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இடையே, ஆளுநர் அரசியலை புகுத்துகிறார் என்ற ஐயம் வருகிறது. ஆளுநரை பொறுத்தவரை அவர் ஆளுநராக இருப்பதைவிட, பாஜகவின் பிரச்சாரத்தை செய்கின்ற ஒருவராகத்தான் இருக்கிறார்.


அரசை ஆலோசிக்காமல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்” என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார். 






மேலும், “பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா என்றாலே, வேந்தர், அவருக்கு அடுத்தபடியாக இணைவேந்தர் மற்றும் சிறப்பு விருந்தினர் இருப்பார்.


ஆனால் மதுரை காமராஜர் பட்டமளிப்பு விழாவில் கௌரவ விருந்தினராக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் அழைக்கப்பட்டு இருக்கிறார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நெறிமுறைகள் (Protocol) மீறப்பட்டுள்ளது. வேந்தருக்கு பிறகு இணை வேந்தர் தான் இருக்க வேண்டும் ஆனால் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் கௌரவ விருந்தினர் என ஒன்றிய இணை அமைச்சர் பெயர் போடப்பட்டுள்ளது.


மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு துறை செயலாளர் மூலமாகவும் துணைவேந்திடமும் நேரிலேயே தெரிவித்து விட்டோம். ஆனால் எங்களின் குரலுக்கு செவி சாய்க்கவில்லை” என்றும் தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண