தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதல் அரசியல் பிரமுகர்களும், திரைப்பிரபலங்களும் வாக்களித்து வருகின்றனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் காலையிலே வாக்களித்து விட்டனர்.


இந்த நிலையில், முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி காலை 10.40 மணியளவில் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு தனது குடும்பத்தினருடன் சென்றார்.




பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்தார். பின்பு தனது முறை வந்தவுடன் தனது பேரனுடன் வாக்குச்சாவடி மையத்தின் உள்ளே சென்றார். அங்கு அவர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தார். பின்னர், அவருக்கு இடது கையின் விரலில் மை வைக்கப்பட்டது. பின்னர், தனது பேரனுடனே சென்று வாக்களித்தார்.  


அவருக்கு பிறகு, அவரது குடும்பத்தினரும் சென்று வாக்களித்தனர். எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக அ.தி.மு.க. கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் சமீபத்தில் மறைந்த தனது தாயார் தவசியம்மாள் உருவப்படம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோரது படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.