மணிப்பூரில் அதிகாரத்தை கைவிட்டு விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே, அங்குள்ள பாஜக அரசு இதுவரை கலைக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


மாறிய இந்திய அரசியல்:


2014ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவில் தேர்தல் அரசியல் நிலவியது. அதாவது தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும், அதில் வெளியாகும் முடிவுகளின் அடிப்படையில் பெரும்பான்மை பெற்ற கட்சி ஆட்சி அமைக்கும். ஆனால், பாஜக ஆட்சி பெற்ற பிறகு இந்தியாவின் தேர்தல் அரசியல் என்பதே முற்றிலும் மாற்றம் கண்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். ”பெரும்பான்மையே இல்லாவிட்டாலும் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கிறது,  எதிர்கட்சிகளின் ஆட்சி திடீரென கவிழ்ந்து பாஜக ஆட்சி உருவாகிறது, ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்களே பாஜகவிற்கு தாவி ஆட்சியை மாற்றி அமைக்கின்றனர்” என்ற குற்றச்சாட்டுகள் பல்வேறு தரப்பிலும் முன் வைக்கப்படுகிறது.  சட்ட ஒழுங்கு மற்றும் நாட்டின் பாதுகாப்பு போன்ற காரணங்களால் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுவதையும் காண முடிகிறது. இதனால், எப்போது ஆட்சி கவிழும், எம்.எல்.ஏக்கள் கட்சி தாவுவார்கள் என்ற கலக்கம், மாநில அளவிலான எதிர்கட்சிகளிடையே நிலவுவதை வெளிப்படையாகவே காண முடிகிறது.


குற்றங்களை வெளுக்கும் பாஜக:


பாஜகவின் அரசியல் என்பது ஒற்றை குறிக்கோளை கொண்டது தான். ஆட்சிக்கு வருவதற்காக எந்த பிரச்னயையும் கையிலெடுக்கலாம் என்பது தான் அது. இது மாநிலங்களுக்கு ஏற்றவாறு மாறுபடும். பாஜக ஆளும் மாநிலங்களில் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான உறவு என்பது சுமூகமாக இருக்கும். ஆனால், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் அந்த நிலை தலைகீழாக தான் இருக்கிறது ஏன் என்று தெரியவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளின் நடவடிக்கையை பெரிதாக காண முடியாது. ஆனால் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தீவிரமாக செயல்படுவதை காணலாம். தவறு இழைப்பவர்கள் தண்டிக்கப்படுவது அவசியம். ஆனால், அரசியல் நோக்கத்திற்காக சிலர் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது, அதேநேரம் ”பாஜகவில் இணைந்தவர்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் இருட்டடிப்பு செய்யப்படுவது எல்லாம் என்ன மாதிரியான அரசியல்”  என எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். தேர்தல் பரப்புரையின் போது அவதூறாக பேசிய ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடக தேர்தலின் போது விதிகளை மீறி மதம் தொடர்பாக மோடி பேசியதை எல்லாம் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால், ”விசாரணை அமைப்புகள் மற்றும் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக அரசியல் சார்பின்றி செயல்படுகின்றன என்பதை நம்பிதான் ஆக வேண்டும்” என காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.


பாஜகவின் தந்திர அரசியல்:


பாஜக எப்போதும் வெற்றிக்காக ஒரே கொள்கையை பின்பற்றியதில்லை. வடகிழக்கு மாநிலங்கள் என்றால் வளர்ச்சி, வடமாநிலங்கள் என்றால் இந்துத்துவா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் சட்ட ஒழுங்கு, தற்போது தமிழகத்தில் வாரிசு அரசியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் என எந்த பகுதியில் எந்த பிரச்னை தங்களுக்கு சாதகமாக அமையுமோ அதனை கையிலெடுத்து பிரச்னையை பெரிதாக்கி அரசியல் செய்யும். அதேநேரம், அது பாஜகவிற்கு பின்னடைவாக இருந்தால் அதுதொடர்பாக ஒரு கருத்தை கூட வெளியிடாமல் கடந்து சென்றுவிடும். எப்போது எதிர்கட்சிகள் சறுக்கும், அசைந்த நேரம் பார்த்து அடித்து ஆட்சியை கைபற்றலாம் என கழுகுப்பார்வையில் பார்க்கும் பாஜக, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என குற்றம்சாட்டுகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைந்தால் இரட்டை இன்ஜின் ஆட்சியாக வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்க முடியும் என பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.


பற்றி எரியும் மணிப்பூர்..!


அப்படி இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் தான், சர்வதேச அளவில் ஒட்டுமொத்த இந்தியாவே வெட்கி தலைகுனியும் அளவிலான வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே அங்கு தொடர்ந்து வரும் மோதலின் உச்சபட்சமாக, குக்கி இன பெண்கள் இரண்டு பேர் நிர்வாணமாக்கப்பட்டு பட்டப்பகலில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக, இரண்டு மாதங்களுக்குப் பின் அண்மையில் அந்த வீடியோ வெளியான பிறகு தான் குற்றவாளிகளையே கைது செய்துள்ளது மணிப்பூர் காவல்துறை.


இரட்டை இன்ஜின் அரசு எங்கே? 


மேலே குறிப்பிடப்பட்ட பல்வேறு வன்முறைகள் மற்றும் பெண்களுக்கான அநீதியானது எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடைபெற்று இருந்தால், பாஜக அரசின் செயல்பாடு என்பதே வேறு விதமாக இருந்து இருக்கும் என பல்வேறு அரசியல் தலைவர்கள் பேச தொடங்கியுள்ளனர். சட்ட ஒழுங்கை காரணம் காட்டி இந்நேரம் அங்கு ஆட்சியே கலைக்கப்பட்டு, குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு இருக்கும். ஆனால், 70 நாட்களுக்கு மேலாக மணிப்பூரில் நடந்து வரும் பிரச்னை குறித்து வாயே திறக்காத மோடி, நாடாளுமன்றம் கூடிய நாளில் தான் வெறும் 39 விநாடிகளை ஒதுக்கி மணிப்பூர் குறித்து பேசி இருந்தார். அதேநேரம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் துணையாக இருப்போம் என்ற ஆறுதலை கூட அவரால் கூற முடியவில்லை. நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ இதுதொடர்பாக கவலைப்படுவது போன்றே தெரியவில்லை. அண்மையில் வெளியான  வீடியோவை போன்று சுமார் 100 சம்பவங்கள் நடந்து இருக்கும் என வாய் கூசாமல் பேசியுள்ளார் மணிப்பூர் முதலமைச்சரான பாஜகவை சேர்ந்த பிரைன் சிங். இப்படி ஒரு கருத்தை எதிர்கட்சிகளை சேர்ந்த முதலமைச்சர்கள் யாரேனும் பேசியிருந்தால்  இந்நேரம் அவர்கள் பதவியில் இருந்து இருப்பார்களா, அந்த ஆட்சி நீடித்து இருக்குமா என்பதை, கடந்த 9 ஆண்டுகால இந்திய அரசியலை பார்த்தாலே நம்மால் உணர முடியும்.


2024 தேர்தல்:


மணிப்பூரே பற்றி எரிந்து கொண்டிருந்தாலும் இரட்டை இன்ஜின் அரசு எந்தவித, அதிரடி நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காக்க தற்போதைய சூழலில் ஒரே காரணம் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தான் என கூறப்படுகிறது. ஏற்கனவே 9 ஆண்டு ஆட்சியின் சாதனைகளை பட்டியலிடுவதை விட, எதிர்கட்சிகளை சாடி பரப்புரையில் ஈடுபடுவதிலேயே பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில், மணிப்பூரில் ஆட்சி கலைக்கப்பட்டாலோ, முதலமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டாலோ இரட்டை இன்ஜின் அரசு என்ற பாஜகவின் விளம்பரத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அக்கட்சி கருதுகிறது. இதனை தவிர்க்கவே, மத்திய அரசு மணிப்பூரில் இதுவரை எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி சமூகத்த சேர்ந்தவர் தான் முதலமைச்சர் பிரைன் சிங் என்பதால், வாக்கு வங்கி பாதிக்கப்படக்கூடாது என பாஜக முடிவு செய்து செயல்பட்டு வருவதாகவும் எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.