“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்“ என்ற பெயரில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் வகையில், மக்களை சந்திக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று ராமநாதபுரத்தில் பேசியபோது, அதிமுக ஆட்சிக்கு வந்தால், கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடும் என தெரிவித்தார்.

“மீனவர் பிரச்னை, கச்சத்தீவை மீட்க தனிக்கவனம்“

தென் மாவட்டங்களில் தனது பிரசாரத்தை செவ்வாயன்று தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, அன்றைய தினம் சிவகங்கையில் மக்களை சந்தித்தார். அதைத் தெடர்ந்து, நேற்று ராமநாதபுரம் வந்த அவர், பரமக்குடி, திருவாடானை தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.

இந்நிலையில், இன்று காலை ராமேஸ்வரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நெசவாளர்கள், மீனவர்கள், தற்காலிக ஆசிரியர்கள் உள்பட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு வருவது கவலை அளிப்பதாக தெரிவித்தார். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென்றல், கச்சத்தீவை மீட்பதே ஒரு வழி என தெரிவித்தார்.

அதனால், இதை கருத்தில் கொண்டு, அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, அதில் தனிக்கவனம் செலுத்தப்படும் எனவும், அதேபோல் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் எனவும் வாக்களித்தார்.

“அதிமுக-வின் மக்கள் நலத்திட்டங்களை திமுக நிறுத்திவிட்டது“

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியின்போது, தமிழ்நாட்டு மக்களின் நலன்களை காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதாக தெரிவித்தார். அந்த திட்டங்கள் மூலம், பொதுமக்கள் பொருளாதார ரீதியில் முன்னேறியதாகவும், விவசாயிகள், தொழிலாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் உள்ளிட்ட ஏராளமானோர் தங்கள் வாழ்வில் வளங்களை பெற்றதாகவும் கூறினார்.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும், நடைமுறையில் இருந்த மக்கள் நலத்திட்டங்களை நிறுத்திவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், திமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும், அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் மீண்டும் தொடங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

அதோடு, நெசவாளர்கள் இன்று பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வரும் நிலையில், அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், அவர்களின் பிரச்னைகள் முழுமையாக தீர்த்து வைக்கப்படும் எனவும் வாக்கு கொடுத்தார். மேலும், நல வாரியம் மூலம் சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, சொல்வதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்று பெயரளவிற்கு கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் மக்கள் பிரச்னைகளை மறந்துவிடுவதாக அவர் விமர்சித்தார். ஆனால், அதிமுக மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக வைத்து தற்போது வரை செயல்பட்டு வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கச்சத்தீவு மீட்பு விவகாரம் நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் நிலையில், அதற்கான நடவடிக்கை ஏதும் இதுவரை எத்தரப்பினாலும் எடுக்கப்பட்டதுபோல் தெரியவில்லை. இனிமேலும் எடுக்கப்படுமா என்பதும் தெரியவில்லை. இப்படிப்பட்ட சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்துள்ள இந்த வாக்குறுதி மக்களிடையே எடுபடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.