தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இல்லத்திற்கே சென்று அவரை சந்தித்துள்ளது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கூட்டணி கணக்குகள் மாறுகிறதா என்ற கேள்வியையே இந்த சந்திப்பு எழுப்பியுள்ளது. அது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

Continues below advertisement

முதலமைச்சரை சென்று சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்

பரபரப்பான அரசியல் சூழலில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்திற்கே போய் சந்தித்துள்ளார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். சமீபத்தில், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டு, சில நாட்கள் சிகிச்சைக்குப் பின் மீண்டும் வீடு திரும்பினார். அதைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி 3 நாட்கள் ஓய்விற்குப் பின் இன்று தலைமைச் செயலகம் சென்றார் மு.க. ஸ்டாலின்.

அதற்கு முன்னதாக, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, முதலமைச்சரின் நலம் விசாரிப்பதற்காக, அவரது இல்லத்தில் சந்தித்தார். அவருடன் எல்.கே. சுதீஷ் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் சென்றனர். இந்த சந்திப்பு உடல்நல விசாரிப்பு என்று கூறப்பட்டாலும், அரசியல் வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

திமுக உடன் தேமுதிக கூட்டணியா.?

தமிழ்நாட்டில், சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணிகளை இறுதி செய்வதில் பல்வேறு முக்கிய கட்சிகளும் தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்த நிலையில், தேமுதிக எந்த கூட்டணியில் இணையப் போகிறது என்பது ஒரு புதிராகவே இருந்தது. கூட்டணி குறித்து சரியான தருணத்தில் அறிவிப்போம் என பிரேமலதா தெரிவித்திருந்தார்.

இத்தகைய சூழலில், அவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சென்று சந்தித்தது, கூட்டணி கணக்குகளை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தேமுதிக, திமுக உடன் கூட்டணி அமைக்கப் போகிறதா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

ஏற்கனவே, திமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட சூழலில், பிரேமலதா அவரை சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்கனவே நடந்த தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில், எந்த கூட்டணிக்கு சென்றாலும் அதிக இடங்களை கேட்டு பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனால், திமுக உடன் கூட்டணி அமைத்தால் அப்படி செய்ய இயலுமா என்பது சந்தேகம்தான்.

அதிமுக கூட்டணி இன்னும் தொங்கலிலேயே இருப்பதால், அங்கு போகும் சூழல் தற்போது இல்லை. தனித்தனியே இருக்கும் மற்ற கட்சிகளுடன் சேர்வது தேமுதிக-விற்கு ஒத்துவராது. அதனால், திமுக ஒன்றுதான் வழி என்ற முடிவை நோக்கி தேமுதிக செல்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், திமுக கூட்டணிக்கு சென்றால், தேமுதிகவிற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்பது கேள்விக் குறியே. ஏனென்னால், அவர்கள் அதிகமாக விமர்சித்ததே திமுக-வைத் தான். ஆனால், அரசியலில் எதுவும் சாத்தியம் என்பது மக்களுக்கும் தெரிந்ததுதான்.

அப்படி திமுக பக்கம் தேமுதிக சாய்ந்தால், பழைய அளவிற்காவது வாக்குகள் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.!!